லோக்சபா தேர்தல் கற்றுத்தந்த பாடம்? வேலைவாய்ப்பை ஊக்குவிக்க மோடி அரசின் பட்ஜெட்டில் சூப்பர் திட்டம்
டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கற்ற பாடத்திற்கு பிறகு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஊக்கம் தரும் நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவுமே தயாரிக்கப்பட்டது போல் இருப்பதால் பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். அரசு அறிவித்த மூன்று சூப்பர் அறிவிப்புகளை பார்ப்போம்.
இந்தியாவை பொறுத்தவரை வேலையில்லா திண்டாட்டம் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் வேலையை உருவாக்குவது சவாலான காரியமாக உள்ளது. வேலையின்மை, திறமையின்மை போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் ஒன்றரை கோடி இளைஞர்கள் வேலை தேடும் நிலைக்கு வருகிறார்கள். இதனால் நாட்டில் வேலைகள் எப்போதும் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மெஜாரிட்டி கிடைக்காமல் போக வேலையின்மை முக்கிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது. பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக சரிவை சந்திக்க இந்த வேலையின்மை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான ஒரு பெரிய ஊக்கம் தரும் விஷயங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இன்று பட்ஜெட்டில் பிரதமர் பேக்கிஜின் ஒரு பகுதியாக புதிய வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இபிஎப்ஓவில் புதிய ஊழியர்களை பதிவு செய்தல் மற்றும் முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களை அங்கீகரிப்பது மற்றும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துவது போன்றவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க பின்வரும் மூன்று திட்டங்களை எங்கள் அரசாங்கம் செயல்படுத்த போகிறது.
இந்த திட்டத்தின்படி, முறையான துறைகளிலும் புதிதாக பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை (15000 வரை) வழங்கப்படும். இந்தத் திட்டம் உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும், முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காவும் செயல்படுத்தப்படுகிறது. ஊக்கத்தொகை குறிப்பிட்ட அளவில், நேரடியாக பணியாளர் மற்றும் முதலாளி இருவருக்கும் வழங்கப்படும். 30 லட்சம் இளைஞர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கு பலனளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்றார்.
மத்திய அரசின் திட்டப்படி, புதிய இபிஎப்ஓவில் புதிய ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம், 15,000 ரூபாய் வரை நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூன்று தவணைகளில் வழங்கப்படும். ஒரு மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இந்த தகுதி உடையவர்கள் ஆவர். மேலும் இதன் மூலம் 2.1 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக நிர்மலா சீதாராமன் ஒரு புதிய மத்திய நிதியுதவி திட்டத்தை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், " மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினருடன் திறன் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதமர் பேக்கேஜின் கீழ் நான்காவது திட்டமாக, புதிய மத்திய நிதியுதவி திட்டத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இருபது லட்சம் இளைஞர்கள் ஒரு வருடத்திற்கு மேல் இந்த திட்டப்படி திறன் பெறுவார்கள். அடுத்த ஐந்தாண்டு காலத்தில் ஆயிரம் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்" என்றார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மெஜாரிட்டி பெற முடியாமல் போனதற்கு வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியப் பங்காற்றியது என்றே சொல்கிறார்கள். பட்ஜெட்டில் அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும், ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை, ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும், முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும், தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை பார்க்கும் போது, வேலையில்லா திண்டாட்டம் விவகாரத்தை பாஜக தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பது தெரிகிறது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications