சென்னை சிஎம்டிஏ திவாலாகும் நிலை! அடுத்த மாத சம்பளத்திற்கு பணமில்லை! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் ஒட்டுமொத்த நகர்ப்புற வளர்ச்சியை தீர்மானிக்கும் சி.எம்.டி.ஏ அமைப்பு, ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாமல் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் நடந்த உட்கட்டமைப்பு ஒப்பந்த முறைகேடுகளே இந்த 54 ஆண்டுகால வரலாற்று சரிவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அன்புமணி, இதன் உண்மை நிலவரங்களை விளக்க, தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள சாராம்சம் இதுதான்: "சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு, அப்பார்ட்மெண்ட் கட்ட பிளான் அப்ரூவல் கொடுக்கும் சி.எம்.டி.ஏ (CMDA) அமைப்பு, அடுத்த மாத சம்பளம் கொடுக்கக்கூடப் பணமில்லாமல் திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது.

1972-ல் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 54 வருடங்களாகத் தன் சொந்தக் காலில் நின்ற இந்த அமைப்பு, இப்போது அடிப்படைச் செலவுகளுக்கே அரசிடம் காசு கேட்டு நிற்கிறது.
"ஜூலை மாத சம்பளம் போடவும், அவசரச் செலவுகளுக்கும் உடனே 200 கோடி ரூபாய் மானியம் கொடுங்கள்" என்று சி.எம்.டி.ஏ தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய பிறகுதான் இந்த அவலநிலை வெளியே தெரியவந்துள்ளது. இன்றைக்கு சி.எம்.டி.ஏ-வுக்கு சுமார் 3,500 கோடி ரூபாய் கடன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
திடீர் கடனுக்கு என்ன காரணம்?
சி.எம்.டி.ஏ-வின் முக்கியமான வேலை, கட்டுமானங்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டும்தான். அதற்கு வாங்கும் கட்டணத்தை வைத்துத்தான் ஊழியர்களுக்குச் சம்பளமும், ஆபீஸ் செலவும் இத்தனை காலமாக எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து வந்தது.
ஆனால் கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் செய்ய வேண்டிய 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரோடு, பாலம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்யும் பொறுப்பை, கட்டாயமாகச் சி.எம்.டி.ஏ தலைமேல் தூக்கி வைத்தார்கள். இதனால்தான் இந்த அமைப்பின் கஜானா காலியாகி, கடன் சுமை ஏறியிருக்கிறது.
ஒப்பந்த முறைகேடு புகார்கள்
கடந்த திமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஊழல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. 2025-26ஆம் ஆண்டிலேயே, அடுத்த வருஷ பட்ஜெட் (2026-27) பணத்திலிருந்து முன்கூட்டியே 2,000 கோடி ரூபாயை எடுத்து, போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் கொடுத்தார்கள்.
கமிஷன் வாங்கும் பேராசையில் நெடுஞ்சாலைத்துறையில் இப்படி விதிமீறல் நடந்தது போலவே, சி.எம்.டி.ஏ-விலும் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பெரிய பெரிய கான்ட்ராக்ட் கொடுத்து, அதன் மூலம் முறைகேடுகள் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. அதிகாரிகளின் இந்த பேராசைதான் இன்றைக்குச் சம்பளம் கூடக் கொடுக்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
அரசுக்கு பறந்த டிமாண்ட்
சி.எம்.டி.ஏ-வை வலுக்கட்டாயமாக இந்த வேலைகளைச் செய்ய வைத்தது யார்? யாருக்கெல்லாம் இந்த கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது? இதில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது? என்ற முழு விவரங்களையும் அடக்கிய "வெள்ளை அறிக்கை"யை அரசு உடனடியாக மக்களுக்கு வெளியிட வேண்டும். அதே நேரத்தில், ஊழியர்களின் வாழ்வாதாரமும், சி.எம்.டி.ஏ-வின் அன்றாட வேலைகளும் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழக அரசு உடனே தேவையான அவசர நிதியை வழங்கி உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications