மாதந்தோறும் 5 ஆயிரம் அக்கவுண்டில் விழும்.. இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: மாதம் ரூ.5 ஆயிரம் என வருடத்திற்கு 60 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படித்து முடித்த இளைஞர்கள் சரியான ஒரு வேலைவாய்ப்பை பெறுவது பெரும்பாடாக உள்ளது. அதேவேளையில், எந்த ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாலும் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் அனுபவம் கேட்கின்றன. இதனால், முன் அனுபவம் இல்லாத பிரஷர்கள் இன்றைய காலக்கட்டத்தில் வேலை வாய்ப்பை பெறுவது என்பது கொஞ்சம் கடினமானதாகவே உள்ளது.

மோடியின் கனவுத் திட்டம்: இந்த நிலையில் தான், நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் விதமாகவும், வேலைக்கான பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. அதாவது இன்டர்ன்ஷிப் (தொழில் பயிற்சி) திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களை அரசு தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டிற்கு 60 ஆயிரம் கிடைக்கும்.
1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு: இதில் ரூ.4,500 மத்திய அரசும், ரூ.500 சம்பந்தப்பட்ட நிறுவனமும் வழங்கும். தகுதி உள்ள இளைஞர்கள், வரும் 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட நிறுவனங்கள் பரிசீலனை செய்து நவம்பர் 27 ஆம் தேதிக்குள் தேர்வு பட்டியலை வெளியிடும். அதன்பிறகு பயிற்சிகள் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும். சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2024 - 2025 நிதி ஆண்டில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும்.
தகுதிகள் என்ன?:
* வயது வரம்பு 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர ஊழியராக இருக்க கூடாது.
* குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியராக இருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
* ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ, பிஃபார்ம் உள்ளிட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்தை தாண்டக் கூடாது.
* முதுநிலை பட்டதாரிகள் தொழில் பயிற்சி திட்டத்தில் சேர முடியாது.
எப்படி விண்ணப்பிப்பது?: விருப்பம் உள்ளவர்கள் www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இந்த தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த தொழில் பயிற்சி அளிக்கும் திட்டத்தில், அதானி குழுமம், மகிந்திரா குழுமம், மாருதி சுசிகி, ஐசிஐசிஐ, இந்துஸ்தான் லீவர், சாம்சங் உள்ளிட்ட 500 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.












Click it and Unblock the Notifications