நாகர்கோவில் சிறைக்கைதி சபரிவர்மன் மரணம்.. கொலை வழக்காக மாற்றம்! 3 போலீசார் அதிரடி கைது!
குமரி: நாகர்கோவில் சிறைக்கைதி சபரிவர்மன் மரணம் வழக்கானது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடை நம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று இரண்டாவது நாளாக நாகர்கோவில் குற்றவியில் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். அப்போது சாத்தான்குளம் கொலை வழக்கு போலவே சபரிவர்மனை கொன்றுள்ளனர் என அவரது மனைவி கூறினார்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது33). பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 9 ஆம் தேதி இவரது கடையில் சோதனை நடத்திய போலீசார் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக கைது செய்தனர். இதையடுத்து போலீசார் சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

உறவினர்கள் போராட்டம்
ஜெயிலில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன், நேற்று காலையில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிறைத் துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சபரிவர்மன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். மேலும் சபரிவர்மனுக்கு எந்த வித நோயும் கிடையாது.. எனவே அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினர். மேலும் உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என ஆசாரிபள்ளம் - ராஜாக்கமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார்.
உடலில் 19 இடங்களில் காயங்கள்
சபரிவர்மனின் தாய் மற்றும் மனைவியை மட்டும் உடலை பார்க்க அனுமதித்தனர். பிண அறையில் உடலை பார்த்துவிட்டு வந்த அவர்கள், சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார். அப்போது சபரிவர்மனின் குடும்பத்தினர் மற்றும் சிறைக்காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
மேலும், சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதால் பிரேத பரிசோதனை தனது கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும் சபரிவர்மன் உடலை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் நாகர்கோவில் வரவழைக்கப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
3 போலீசார் கைது, சஸ்பெண்ட்
நேசமணி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் சிறை தலைமை வார்டன் உள்பட 3 போலீசார் கைது செய்யப்பட்டனர். சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடை நம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
