ஊர்க்காவல் படையில் வேலை.. அதுவும் சென்னையிலேயே.. மிஸ் பண்ணிடாதீங்க.. தேதி முடிய போகுது
சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.
காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வப் படையாக ஊர்காவல் படை செயல்படுகிறது. நாடு முழுவதும் ஊர்க்காவல் படை முறை செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில், சென்னை பெருநகர ஊர்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாநகராட்சி காவல் ஆணையகரம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
வயது வரம்பு: ஊர்க்காவல் படையில் சேர விரும்புவர்கள் 18-வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஆண் - பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி அடையாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதிகள்: குற்றப் பின்னனி இல்லாதவராகவும், நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவார்கள்.
சம்பளம் எவ்வளவு: ஊர்க்காவல் படைக்கு தேர்வு ஆனவர்களுக்க்கு சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணி ஆகியவற்றிற்கு ரூ.560 சிறப்பு படியாக அளிக்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறந்த முறையில் பணி செய்பவர்களுக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஊர்க்காவல் படையில் சேருவதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று நேரிலோ தபாலிலோ வழங்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 31 ஆம் தேதி ஆகும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: "சென்னை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15 (போன் - 044 2345 2441/ 2442). இதே முகவரியில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications