தமிழக மருத்துவ வாரியத்தில் வேலை.. 425 பணியிடங்கள்.. 1.30 லட்சம் சம்பளம்! டிப்ளமோ, டிகிரி தகுதி தான்
சென்னை: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர்(Pharmacist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 425 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் சம்பளம் வழங்கப்படும். டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழக மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் எம்ஆர்பி நிரப்பி வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களையும் எம்ஆர்பி நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது மருத்துவத் துறையில் காலியாக உள்ள 425 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது பற்றிய கூடுதல் விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் & கல்வித் தகுதி: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் 425 மருந்தாளுனர்(Pharmacist) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கல்வித்தகுதியை பொறுத்தவரை பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ நர்சிங், டி - பார்ம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 01.07.2025இன் படி, 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ் சி / எஸ் டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் 1,30,400 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வானது இரண்டு பகுதிகளாக நடக்கும். முதல் பகுதி மொழித்தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 1 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும். இதில் 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் இரண்டாம் பகுதி தேர்வுக்கு தகுதி அடைய முடியும். இல்லையெனில் இரண்டாம் பகுதி தேர்வு எழுத முடியாது.
இரண்டாம் பகுதி தேர்வை பொறுத்தவரை, மருந்தியல் பாடப்பிரிவில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒரு வினாக்களுக்கு ஒரு மதிப்பெண் என்ற வகையில் 100 வினாக்கள் கேட்கப்படும். 2 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேர்வர்கள் http://mrbonline.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினருக்கு ரூ. 1000 ஆகும். எஸ் சி /எஸ்டி /மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.500 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மார்ச் 10 ஆம் தேதி ஆகும்.












Click it and Unblock the Notifications