MSME நிறுவனங்களை தொடங்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகைகள் என்னென்ன?
சொந்தமாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் சார்பில் ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக மானியங்கள், குறைந்த வட்டி விகிதங்கள், பிணை இல்லாத கடன்கள் என பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு பெண் தொழில் முனைவோருக்கு சலுகைகளை அளிக்கும் முக்கிய திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உத்யோகினி திட்டம் (Udyogini Scheme):
உத்யோகினி திட்டம் என்பது, பெண்களை சுய தொழில் முனைவோராக மாற்றுவதற்கும், அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை அளிப்பதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டமாகும். இது கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் இருக்கும் ஏழைப் பெண்கள், சொந்தமாக சிறு தொழில்களை தொடங்கவும், அதன் மூலம் சுய சார்பு அடையவும் நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனாளியின் பிரிவைப் பொறுத்து 50% வரையில் மானியமும் கிடைக்கிறது. விதவை பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வட்டி இல்லா கடன் பெறவும் வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சில்லறை வணிகம், வேளாண்மை சார்ந்த தொழில்கள், கேட்டரிங் தொழில், தையல், பேக்கரி, அழகு நிலையம், காகித தட்டு தயாரித்தல் உட்பட 88 வகையான சிறு தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (Stand-up india scheme):
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் SC/ST பிரிவினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்க 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இது ஒரு கிரீன்ஃபீல்ட் திட்டமாக இருக்க வேண்டும். அதாவது தொழிலை தொடங்கும் பயனாளியின் முதல் முயற்சி அல்லது முதல் நிறுவனமான இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் திட்ட செலவில் 85% வரையில் கடன் வழங்கப்படலாம். மீதமுள்ள தொகையை தொழில் தொடங்குபவர் கைவசம் வைத்திருக்க வேண்டும். இந்த கடனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகள் அதிகபட்சமாக கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதோடு புதிய தொழிலை அமைத்து அதிலிருந்து வருமானம் ஈட்ட ஆரம்பிக்கும் வரை கடன் தவணையை செலுத்த வேண்டியதில்லை. இந்த தடை காலம் (Moratorium period) 18 மாதங்கள் வரையில் நீட்டிக்கப்படலாம். இது தொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்தை நிறுவுதல், இயந்திரங்கள் வாங்குதல், உற்பத்தியை தொடங்குதல், அதை சந்தைப்படுத்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த உதவிகரமாகவும் இருக்கும்.
ஒரு புதிய தொழிலைத் தொடங்கிய உடனேயே, ஆரம்பத்திலேயே அதிலிருந்து லாபமோ அல்லது நிலையான வருமானமோ கிடைப்பதில்லை. இந்த ஆரம்ப கட்டத்தில், தொழில் முனைவோர் கடன் தவணைகளை செலுத்த பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆக அப்படியான நிதிச் சுமையை குறைப்பதற்காக இந்த தடை காலம் வழங்கப்படுகிறது. இது புதிய நிறுவனங்களுக்கு தங்களது வணிகத்தை நிலைப்படுத்த போதிய அவகாசம் வழங்குகிறது.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் கடனுக்கு, நாட்டிலுள்ள எந்த வங்கியில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் முதலில் ஆன்லைனில் ஸ்டாண்ட் அப் இந்தியா போர்ட்டலில், தொழில் முனைவோரின் அடிப்படை விவரங்களை பதிவு செய்து, தகுதியுடையவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு விருப்பமான வங்கிக் கிளையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
அன்னபூர்ணா திட்டம்:
அன்னபூர்ணா திட்டம் உணவு மற்றும் கேட்டரிங் துறையில் தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில் முனைவோரை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. சில வங்கிகள் இதை விட அதிக தொகை கொடுக்கலாம் என்றாலும், இந்த திட்டமானது சிறு வணிகத்தை இலக்காகக் கொண்டது. இந்த தொகையை வைத்து சமையலறை உபகரணங்கள் வாங்குவது, பாத்திரங்கள் வாங்குவது, மூலப் பொருட்கள் வாங்குவது, பணியிடத்திற்கான மூலதன தேவைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் காலம், பொதுவாக 36 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.
நீங்கள் உணவுத் தொழில் தொடர்பான கடனைப் பெற விரும்பினால், அருகிலுள்ள அரசு அல்லது தனியார் வங்கிகளை அணுகி, அன்னபூர்ணா திட்டம் குறித்து விசாரிப்பது உதவியாக இருக்கும்.
முத்ரா யோஜனா திட்டம்:
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம், பெரு நிறுவனங்கள், விவசாயம் அல்லாத குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் முறைப்படுத்தப்பட்ட நிதி அமைப்பில் இருந்து கடன் பெற முடியாத சிறு வணிகங்களுக்கு, மலிவான கடன்களை வழங்குவது, அதன் மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாகும்.
இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இது தொழில் வளர்ச்சி நிலையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- சிசு(Shishu)
- கிஷோர் (kishor)
- தருண் (Tarun) என மூன்று வகையாக உள்ளது.
இதில் சிசு பிரிவிற்கு 50,000 ரூபாய் கடனும், கிஷோர் பிரிவில் 50,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலும், தருண் திட்டத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த திட்டத்தின் கீழ் பிணையம் இல்லாமல் கடன் வழங்கப்படுகின்றன. இவை சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தியாவில் சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க விரும்பும் அல்லது மேம்படுத்த விரும்பும் எந்தவொரு தனிநபரும், நிறுவனமும் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறும் பெண் தொழில் முனைவோருக்கு வட்டி விகிதத்தில் சலுகை அளிக்கின்றன.
மஹிளா உதயம் நிதி திட்டம் (Mahila Udyam Nidhi Scheme):
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காகவும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைத் தொடங்கவும் மஹிளா உதயம் நிதி திட்டம் உதவிகரமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சிறு குறு நிறுவனங்கள் (MSMEs) அல்லது புதிய தொழில்களைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்த, நவீனப்படுத்த அல்லது மேம்படுத்த பெண்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இதில் 5 ஆண்டுகள் வரை தடை (Moratorium period) காலம் அனுமதிக்கப்படலாம். அதோடு கடனை திருப்பிச் செலுத்த 10 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இதே போன்று பிரதான் மந்திரி ரோஜ்கர் யோஜனா (PMRY), மஹிளா கோயர் யோஜனா , டிரேட் ஸ்கீம் (Tread scheme) உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. ஆக பெண்கள் எந்த துறையில் தொழில் தொடங்கப் போகிறீர்கள். அதில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என முழுமையாக தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.












Click it and Unblock the Notifications