For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கே: பெண்கள் முன்னேற்றம் பற்றி ஆண்கள்தானே அதிகமாக குரல் கொடுக்கிறார்கள்?

ப: வேண்டாத விஷயங்களை வளர்த்து விடுவதே இந்த ஆண்கள் தான் என்று நாளை பெண்கள் வாதிட, இது வழி செய்யும்.

கே: சாத்தானின் சேட்டையால் தவறு செய்தேன் என்று பாவ மன்னிப்புக் கோரும்போது, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குரோனியே கூறியுள்ளதுபற்றி...?

ப: நல்லவேளை. ஏதோ சாத்தான் தலையிட்டதால் சில மேட்சுகளையாவது இந்தியா ஜெயித்தது. இல்லாவிட்டால், தென் ஆப்பிரிக்கர்கள் சாத்து சாத்துஎன்று சாத்தியிருப்பார்கள். அவர்கள் நம்மைச் சாத்தாமல் விட்டதற்கு, சாத்தானுக்கு நன்றி.

கே: இலங்கைப் பிரச்சனையிலல் பா.ஜ.க. நிலை சரியானதுதானா?

ப: தேசிய ஜனநாயக கூட்டணியைக் காப்பாற்றிக் கொள்ள இந்த வழிமுறை சரியானதுதான்: நாட்டிற்கு வரக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க சரியான வழிஇல்லை.

கே: த.மா.கா.வும் - காங்கிரஸும் ஒன்று சேர்ந்து தி.மு.க. வையும் - அ.தி.மு.க.வையும் வீழ்த்துவதாகக் கனவு கண்டேன் . பலிக்குமா?

ப: நல்ல கனவுகளை வெளியே சொல்லி விட்டால் - அவை பலிக்காமல் போய்விடும் என்று கூறப்படுவதுண்டு. உங்கள் கனவை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்: அது பலிக்காமல் போகும்போது, அது நல்ல கனவு என்று புரிந்து கொள்ளுங்கள்.

கே: திரைப்பட நடிகர் ஜெய்சங்கரின் மறைவு குறித்து...?

ப: எதிரிகள் எவருமில்லாத பண்பாளர். மிகவும் நல்ல மனிதர். பரோபகாரி. கருணை மிக்கவர். நடிப்புத் துறையில் வெற்றி பெறுவது என்று தீர்மானித்து,திட்டமிட்டுச் செயல்பட்டு, நினைத்த காரியத்தை சாதித்த உழைப்பாளி. அவருடைய குடும்பத்தாருக்கு, என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

கே: சோ போன்றவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது என்கிறாள் என் தோழி. எந்த வகையில் இது உண்மை?

ப: என் போன்றவர்கள் விஷயத்தை, உங்கள் தோழி, விஞ்ஞான ரீதியாக அணுகியிருக்கிறார். என் போன்றவர்களின் தலை மீது சூரிய ஒளி பட்டு, அதுமுழுமையாக பிரதிபலிக்கும் போது, நீர் நிலைகள் ஆவியாகி. மேகமாகி மழை பொழியும்.

கே: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து தனிப் போராட்டம் நடத்தினால்தான், மக்கள் நினைவில் வைப்பார்கள் என்று மூப்பனார் கூறியிருப்பதுபற்றி...?

ப: இவர் கூறியுள்ளதை விட, அ.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் காளிமுத்து அளித்துள்ள விளக்கம்தான் சுவாரஸ்யமானது. முல்லைப் பெரியாறுஅணை விஷயத்தில் தனித்தனியாக நாங்கள் போராட்டம் நடத்தினோம். பொதுப் பிரச்சனை என்று வரும்போது. சேர்ந்து போராட்டம் நடத்துவோம்என்று கூறியிருக்கிறார் அவர். அதாவது, முல்லைப் பெரியாறு பொதுப் பிரச்சனை அல்ல என்பது இவர்கள் கருத்து. ஊழல் வழக்கில் தண்டனைவந்தால்தான் பொதுப் பிரச்சினை போலிருக்கிறது.

கே: என் நாடு, என் மக்கள் என்று நினைப்பவர்கள் உண்டா...?

ப: அரசியல்வாதிகள் பலரும் என் மக்கள் என்று நினைக்காவிட்டாலும் நிச்சயமாக என் நாடு என்றுதான் நினைக்கிறார்கள். அதனால்தான்,நாட்டில் இருப்பதும், நாட்டிலிருந்து கிடைப்பதும், தனக்கே சொந்தம் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

கே: மூன்றாவது அணியின் தலைவர் ஜோதிபாஸுதான் என்று வி.பி.சிங் அடித்துக் கூறுகிறாரே...?

ப: ஜோதிபாஸு வருவதை கம்யூனிஸ்டுகள் தடுப்பார்கள். அந்த நிலையில் தன்னுடைய பெயர் முன்னுக்குத் தள்ளப்படும் - என்பது வி.பி.சிங் போடும் கணக்காகஇருந்தால், வியப்பதற்கில்லை.

கே: புனாவில் பெண்கள் புரோகிதத் தொழிலில் ஈடுபட்டுள்ளது குறித்து தங்கள் கருத்து என்ன?

ப; அது அவர்கள் இஷ்டம். வைதீக சடங்குகளைச் செய்ய அந்த புரோகிதர்களை அழைப்பதும், அழைக்காததும், அந்தச் சடங்குகளைச் செய்பவர்களின் இஷ்டம்.நானாக இருந்தால், அவர்களை அழைத்து வைதீக சடங்குகளை நடத்த மாட்டேன்.

கே: பங்களா கட்டிய அரசு: பாலங்கள் கட்டிய அரசு - ஒப்பிடுங்களேன்?

ப: வழக்குகளுக்கு சாட்சியங்களை வைத்த ஆட்சியாளர்கள்: சாட்சியங்களை வைக்காத ஆட்சியாளர்கள்.

கே: வீடு வரை உறவு, வீதி வரை மனைவி , காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ - என்ற கண்ணதாசனின் அந்தக் கடைசிக் கேள்விக்குஉம்மிடமாவது பதில் உண்டா...?

ப: கடைசி வரை - கள்ள ஓட்டுப் போடுபவர். ஒரு மனிதன் செத்த பிறகும், அவனுடைய ஓட்டைப் போட்டு, அவனைப் பிழைப்பிக்கும் புண்ணியவான்.

கே: முரடன் , மூர்க்கன், கொலைகாரன், கொள்ளைக்காரன் - இவர்களுக்கு சுதந்திரம் அளித்தால், நம் நாட்டின் நிலைமை என்னவாகும்?

ப: யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் எல்லாம் அரசியலில் நுழைவார்கள். தேர்தலில் நிற்பார்கள்: சட்ட சபைகளுக்கும், பாராளுமன்றத்துக்கும்செல்வார்கள்: ஆட்சியிலும், எதிர்க் கட்சியிலும் இடம் பெறுவார்கள் ...அட. இன்று என்ன நிலைமையோ, அதே நிலைமைதான் இருக்கும்!

கே: சுப்ரமண்யம் ஸ்வாமியின் எதிர் காலத் திட்டம் என்னவாக இருக்கும்?

ப: இந்த வேலை என்னிடம் வேண்டாம். உங்கள் தந்திரம் எனக்குப் புரிகிறது. தோசை கடை போராட்டம் நடத்த திட்டமிடுகிறாரோ, என்னவோஎன்று என்னை பதில் சொல்ல வைப்பதற்காக இப்படி கேட்கிறீர்கள். உங்கள் வலையில் நான் விழ மாட்டேன்.

கே: இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்கள். இலங்கை ராணுவத்தை மட்டுமே குறை சொல்கிறார்களே...?

ப: பயம் இருக்காதா? விடுதலைப் புலிகள் தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல், வேறு நாடுகளிலும் கொலை செய்வார்களே?

கே: ஒரு குற்றவாளி எப்போது வழக்கிலிருந்து தப்பிக்கிறான்...?

ப: இரண்டு பெண்மணிகள் வழக்கில் மாட்டிக் கொள்கிறார்கள் - என்று வைத்துக் கொள்வோம்: அதில் ஒரு பெண்மணியை மட்டுமே மாட்டிவைக்க, அரசு முயன்றால், அப்போது மற்றொரு பெண்மணி தப்பிக்கலாம். இது ஒரு கற்பனை உதாரணம். இன்னும் பல வழிகள் உண்டு. அவற்றில் பல,அரசின் தயவு இருந்தால்தான் நடக்கும்.

கே: சென்னையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க, உருப்படியான வழிதான் என்ன?

ப: கிருஷ்ணா நதி நீர் பெறுவதற்காக, தமிழகம் பல கோடிகளை செலவிட்டிருக்கிறது. அதைப் பெற்றுத்தான் தீர வேண்டும். இது ஒரு புறமிருக்க, கிருஷ்ணா நீர்வரும்போது அதைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் இப்போதே செய்யப்பட வேண்டும். இது போக, மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.பயன்படுகிற வகையில், அதைத் தேக்கி வைக்கவும், அதன் மூலமும் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழிகள் என்ன என்பதை நிபுணர்களைக் கொண்டுஆராய்ந்து, உடனடியாக செயல்படுத்து வேண்டும். இது தீர்க்கக் கூடிய பிரச்சனையே. முனைப்புதான் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X