தமிழகத்தில் இன்று
அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா?
சென்னை:
மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று பழமொழியின் வரிசையில் இனி தமிழக காங்கிரசின்அமைதி 40 நாள் என்பதையும் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு சரியாக 40 நாள் தான் முடிந்துள்ளது.அதற்குள் ஆரம்பித்து விட்டது கோஷ்டிச் சண்டை. சென்னை வந்திருந்த காங்கிரஸ் டெல்லித் தலைவர்களைசந்தித்து புதிய தலைவர் பற்றி மணிக் கணக்கில் புகார் கூறியுள்ளன அதிருப்திக் கோஷ்டிகள்.
காங்கிரசில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இவ்வளவு சீக்கிரத்தில் கோஷ்டிப் பூசல்கள் எழும்என்று மேலிடத் தலைவர்களே எதிர்பார்க்கவில்லையாம். தன்னை சந்தித்த அதிருப்தித் தலைவர்களிடம்அதற்குள் ஆரம்பித்து விட்டீர்களா? என்று அதிர்ச்சியுடன் கேட்டாராம் அனில் சாஸ்திரி.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியை கட்டுக்கோப்பான இயக்கமாக வைத்திருந்தவர் காமராஜர்.அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை வந்திருந்தனர் மேலிடத் தலைவர்கள் நட்வர்சிங்,அனில் சாஸ்திரி இருவரும்.
அகில இந்திய காங்கிரசில் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் சோனியாவுக்குநெருக்கமானவர் என்ற செல்வாக்கு பெற்றவர் நட்வர்சிங். அதனால் அவரை அழைத்து வந்துமேலிடத்தில் செல்வாக்கை நிலைநாட்டலாம் என்று புதிய தலைவர் இளங்கோவனுக்கு யாரோசொன்ன யோசனையை அப்படியே செயல்படுத்தினார்.
அவரை மட்டும் அழைத்தால் எதிர்க் கோஷ்டிகள் அதையும் பிரச்னையாக்கி விடும் என்பதால்,தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் என்ற முறையில் அனில் சாஸ்திரியையும் அழைக்கவேண்டியதாயிற்றாம்.
புதிய தலைவர், அவர் நடத்தும் முதல் நிகழ்ச்சி, மேலிட செல்வாக்கு மிக்க தலைவர்கள் வருகை எனபல விசேஷங்கள் இருப்பதால் எல்லா கோஷ்டிகளும் அதிருப்தியை மறந்து சங்கமமாகி விடும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டனர்தங்கபாலுவும், திண்டிவனமும் திடீர் கூட்டணி அமைத்து.
ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாள். சென்னை அண்ணாசாலை ஜிம்கானா கிளப் முன்பு உள்ளகாமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க நட்வர்சிங், அனில்சாஸ்திரியுடன் கிளம்பினார் இளங்கோவன்.மறைந்த காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜருக்கு மரியாதை செலுத்த தமிழக காங்கிரஸ்ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு, தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி, அருணாசலம் போன்ற தலைவர்கள்எல்லோரும் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்கள் யாரும்வரவில்லை. தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததோடு நில்லாமல்,தனி அணியாக சென்று காமராஜர் சிலைக்கு முன் கூட்டியே மாலை அணிவித்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
பதவி பறிக்கப்பட்ட பின்னர் தனிக் கூட்டம் போட்டு ஆதரவாளர்களை திரட்ட முற்பட்ட திண்டிவனம்ராமமூர்த்தியும், தங்கபாலுவும் சில நாட்களுக்கு முன்பு தனியாக சந்தித்து தங்களுக்குள் இனிமேல்தனி அணி வேண்டாம் என்றும், இருவரும் இளங்கோவன் எதிர்ப்பு விஷயத்தில் இணைந்தே செயல்படுவதுஎன்றும் தீர்மானம் செய்துள்ளனர். அதன் முதல் நடவடிக்கை இது என்று தங்கபாலு ஆதரவாளர்கள்தெரிவிக்கின்றனர்.
குமரியாரின் ஆசி!
இந்த இருவரின் திடீர் கூட்டணிக்கு வெளிநாட்டில் இருக்கும் குமரி அனந்தனின் ஆசிர்வாதம் உண்டாம்.தாயகம் திரும்பிய பின் அவரும் இந்த கூட்டணியில் சேர்ந்து கொள்வாராம்.
பெரும்பான்மை பலம் பெற்று விட்ட தைரியத்தில் மேலிடத் தலைவர்கள் பங்கேற்ற இரண்டு நாள்நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தனர் அதிருப்தியாளர்கள்.
இதற்கிடையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த"முன்னாள்கள் கூட்டணி பற்றியும், அவர்களின் ஒத்துழையாமை இயக்கம் பற்றியும் மேலிடத்தலைவர்கள் காதுகளில் ஓதி விட்டாராம் இளங்கோவன்.
உடனே உஷாரான எதிர்க் கோஷ்டிகள் தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி, அருணாசலம்,தண்டாயுதபாணி, சக்திவேல் போன்றவர்கள் எல்லாம் கூட்டாக சென்று அனில் சாஸ்திரியை தனியாகசந்தித்தனர். இளங்கோவன் மீது ஏராளமான புகார்களை அடுக்கினர்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அனில் சாஸ்திரி, அதெல்லாம் சரி. ஏன் நீங்கள் காமராஜர்பிறந்த நாள் விழாவுக்கு வரவில்லை? என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த கோஷ்டிகள் தமிழககாங்கிரஸ் அலுவலகம் எங்கே இருக்கிறது என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்று கோரஸாகபதில் அளித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. தலைமைக்கும்எங்களுக்கும் இடையே அறவே தகவல் தொடர்பு இல்லை. வேண்டப்படாத தலைவர்களாக நாங்கள்கருதப்படுகிறோம். அலுவலகம் திறப்பு உள்பட அத்தனை விஷயங்களையும் இளங்கோவன் மறைத்துவிட்டார் என்று புலம்பித் தள்ளி விட்டனராம்.
அப்படியா என்று கேட்டுக் கொண்டே வந்த அனில் சாஸ்திரி, கட்சி நடவடிக்கைகள் தொடர்பான பழையரிக்கார்டுகளை நீங்கள் கொடுக்கவில்லையாமே? என்று இளங்கோவன் தெரிவித்த புகார் பற்றிகேட்டுள்ளார்.
இளங்கோவனை நம்பி எப்படி கொடுப்பது என்று தான் எங்களுக்குத் தெரியவில்லை. ரிக்கார்டுகளைமாற்றி கட்சித் தேர்தலை தள்ளி வைக்க அவர் முயற்சிக்கிறார் என்று இவர்கள் பதிலுக்கு புகார்கூறியுள்ளனர். இப்படி இரண்டு நாட்களில் குவிந்த புகார்களை அள்ளிக் கொண்டு அனில் சாஸ்திரி திங்கள்கிழமை இரவு டெல்லி திரும்பி விட்டார்.
பாவம் இளங்கோவன்..!. கட்சியை வளர்ப்பது தான் என் முதல் வேலை என்று பதவியேற்ற நாளில்பேசிய பேச்சுக்கு இனிமேல் வேலை இல்லை. எதிர்ப்பாட்டு பாடுவதும், கோஷ்டி கானம்இசைப்பதுமான லாவணி அரசியலுக்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications