படித்தவர்கள்தான் அதிக குற்றம் செய்கின்றனர்"
சென்னை:
வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள் பெயர் மற்றும் விவரங்களை இன்டர்நெட்டில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசின் கண்காணிப்புத்துறை (விஜிலன்ஸ்) ஆணையாளர் என்.விட்டல் தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் ஆராய்ச்சி கல்வி மற்றும் சேவை பிரிவு சார்பில் நிதி நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்தபயிற்சி வகுப்பை விட்டல் துவக்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், குற்றவாளிகள் இப்போது அதிகரித்து வருகின்றனர். குற்றவாளிகள் மிகுந்த எச்சரிக்கையோடும், சாமர்த்தியமாகவும், அறிவுத்திறனைப் பயன்படுத்தியும் செயல்பட்டு வருகின்றனர். சந்தன வீரப்பன் எப்படி சாமர்த்தியமாக ஆட்களை கடத்தி செயல்பட்டு வருகின்றான் என்பதைநினைக்கும்போது வியப்பாக உள்ளது.
குற்றங்கள் பெருகுவதற்கு சமுதாயத்தின் அமைப்பும், சமுதாயத்தில் உள்ள குறைகளும் காரணமாக பெரும்பாலும் அமைந்து விடுகின்றன. அரசுஊழியர்களும், உயர் அதிகாரிகளும் கூட மருத்துவப் படியையும், போக்குவரத்து படியையும் போலி ஆவணங்களைத் தயாரித்து மக்கள் வரிப் பணத்தில் இருந்துபணம் பெற்று வருகின்றனர்.
படித்தவர்களும், பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் இதுபோன்ற குற்றங்களை செய்து வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள்மீது வழக்குத் தொடர்ந்து விசாரணை முடிய நீண்ட நாட்கள் ஆகின்றன.
செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் குறைவாகவே வழங்கப்படுகிறது. வங்கிகளும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் தங்களுக்கு என்றுதனியாக தடய அறிவியல் துறையை உருவாக்கி, ஆய்வகங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் வங்கி மோசடிகளை விரைவில் கண்டறிந்துநடவடிக்கை எடுக்க முடியும்.
வங்கிகளிடையே விரைவாக தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள இப்போது வசதி ஏதும் இல்லை. இதனால் டிமான்ட் டிராப்ட் மூலம்,காசோலைகள் மூலம் பல வங்கிகளை ஏமாற்றி பெரும் பணத்தை சூறையாடும் கும்பலும் செயல்பட்டு வருகிறது.
இப்போதுள்ள கம்ப்யூட்டர் யுகத்தில் தகவல் பரிமாற்றம் விரைவில் செயல்படுவதன் மூலம் வங்கிகளில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கமுடியும். வங்கிகளிலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலும் நடக்கும் மோசடிகளைத் தடுக்க தகவல் தொழில் நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்த வேண்டும்.
வங்கிகளில் பெரும் தொகையை கடனாகப் பெற்று திருப்பித் தராதவர்கள் பெயரையும், போலிக் கையெழுத்துப் போட்டும் பொய்யான ஆவணங்களைத்தயாரித்தும் ஏமாற்றியவர்கள் பெயரை இன்டர்நெட் மூலம் வெளியிட வேண்டும். இதற்காக வங்கிகளில் ரகசிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார் விட்டல்.












Click it and Unblock the Notifications