காற்றில் கரைந்த கீதம்! துப்பாக்கி குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் எஸ். ஜானகியின் உடல் தகனம்!
மைசூர்: 'இசைக் குயில்' என்று ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் கொண்டாடும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் நேற்று காலமானார். மறைந்த எஸ். ஜானகியின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், நான்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். மைசூரில் 88 வயதில் அவர் நேற்று காலமானார்.

1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 48,000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2013-ல் இந்தியாவின் உயரிய விருதான 'பத்ம பூஷன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டபோது, தனக்கு அது தாமதமாக கிடைப்பதாகக் கூறி, அதை ஏற்க மறுத்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் தான் பாடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து முழு ஓய்வில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகி மாரடைப்பால் காலமானார்.
தனது தனித்துவமான குரலால் இந்திய இசைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய எஸ். ஜானகியின் மறைவு, இசையுலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஜானகி மறைவுக்கு திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், அவரது ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜானகியின் உடல் இன்று மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 3 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
