எஸ் ஜானகி மறைவு! கானக்குயிலே காலமானாயா? கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு? வைரமுத்து கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கானக் குயிலே காலமானாயா? முடிந்து விட்டதா உன் மூச்சு என பின்னணி பாடகி, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட எஸ்.ஜானகி மறைவுக்கு, கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

S Janaki passes away

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கானக் குயிலே
காலமானாயா?

அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?

'சிங்கார வேலனே தேவா'வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?

தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?

'நாதம் என் ஜீவனே' என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே

சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!

நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை

கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்

'தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே

அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்'

வாழ்க நீ அம்மா!

#ஜானகி

இவ்வாறு தனது கவிதாஞ்சலியை வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஜானகியின் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

இசைக்குயில் திருமிகு எஸ். ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்.

அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

யார் இந்த ஜானகி அம்மாள்?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஜானகி தனது 9 வயது முதல் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மொத்தம் 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமையும் ஜானகிக்கு உண்டு.

1980, 1990-களில் இளையராஜா- எஸ்பிபி- ஜானகி ஆகியோரின் கூட்டணியில் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்து தென்னிந்திய இசைக்கு பெருமை சேர்த்தனர். நடிகைகளுக்கு ஏற்றாற் போல் குரலை மாற்றி பாடுவதில் வல்லவர்.

88 வயதாகும் ஜானகி, ஆரம்ப காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் தற்போதைய இசையமைப்பாளர் அனிருத் வரை பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி படத்தில் ஜானகி பாடிய "அம்மா அம்மா.." பாடலை கேட்டாலே கண்களில் நீர் வழியும். அந்த அளவுக்கு தாயில்லாத கவலையை தனது குரல்களில் வழங்கியிருப்பார்.

இதையடுத்து 2016 ஆம் ஆண்டு திருநாள் என்ற படத்திலும் ஜானகி பாடியிருந்தார். அவ்வப்போது வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்றும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிர் பிரிந்தது.. காற்றில் கலந்தது கானக்குயில்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+