ஓய்வு பெறுகிறார் ஆம்புரோஸ்
லண்டன்:
பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ், சர்வதேசகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கும் டெஸ்ட்தான் அவர் விளையாட உள்ள கடைசி ஆட்டமாகும். இந்த டெஸ்ட்முடிந்தவுடன் அடுத்த வாரம் தனது ஓய்வு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
இதுவரை 97 டெஸ்டுகளில் விளையாடி உள்ள ஆம்புரோஸ் 402 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள5-வது வீரர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. சக நாட்டவரான கார்ட்னி வால்ஷ் 121 டெஸ்டுகளில் 476 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் 3 முறையும், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் 22 முறையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஒருஓவருக்கு சராசரியாக 2.32 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். 20.96 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை நான் ஏதோ சாதித்துவிட்டதாகக் கருதுகிறேன். இதுவே நான் ஓய்வு பெற சரியான நேரம். கிரிக்கெட் விளையாட்டில் நான்பயன்படுத்தப்பட்ட அளவுக்கு நான் கிரிக்கெட்டை அனுபவிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கான நான் விளையாடிய எல்லா நேரத்திலும் நான் சிறப்பாகவே விளையாடினேன். என்னுடைய முழுத் திறமையையும் காட்டினேன்.இப்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
எனது பந்துவீச்சில் எது சிறந்தது என்று என்னால் குறிப்பாகத் தெரிவிக்க முடியவில்லை. எனது முதல் விக்கெட் பாகிஸ்தான் வீரர் முடாசர் நாசர்,400-வது விக்கெட் இங்கிலாந்தின் மைக்கேல் ஆர்தர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை என்னால் மறக்க முடியாது.
இங்கிலாந்துக்கு எதிராக 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் மற்றும் 45 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது எனது சிறந்த பந்துவீச்சுகளாக இருக்கலாம்.
துரதிருஷ்டவசமாக அந்த மூன்று டெஸ்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனது சக வீரர் கார்ட்னிவால்ஷை பிரிவது கஷ்டமாகத்தான் உள்ளது. இருவரும் பல நல்லது கெட்டதுகளையும், ஏற்ற இறக்கங்களையும் கண்டிருக்கிறோம்.
1988-ம் ஆண்டு முதல் நானும், வால்ஷும் இணைந்து விளையாடி வருகிறோம். நானும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும்என்று எனக்கு ஊக்கமளித்தவர் வால்ஷ் என்றார் ஆம்புரோஸ்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோடிதான் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளது.
இங்கிலாந்தின் ஹரால்டு லார்வுட், பில் வோஸ், ஆஸ்திரேலியாவின் ரே லின்ட்வால், கீத் மில்லர், மற்றும் டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன்,மேற்கிந்தியத் தீவுகளின் வெல் ஹால், சார்லி கிரிஃப்பித், பாகிஸ்தானின் வாஸிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகிய ஜோடிகள் சிறந்தவையாகக்கருதப்படுகிறது.
அந்த வரிசையில் கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ் ஜோடியும் ஒரு சிறந்த ஜோடியாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications