இறந்த பாட்டி உயிருடன் எழுந்தார்
அழகப்பபுரம்: (கன்னியாகுமரி மாவட்டம்)
இறந்துவிட்டதாக வேனில் கொண்டு வரப்பட்ட 80 வயது பாட்டி திடீரென்று எழுந்து உட்கார்ந்தார். இதனால் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்அதிர்ச்சியடைந்து பின்னர் சந்தோஷமாக வீடு திரும்பினர்.
இதுகுறித்த விவரமாவது:
கன்னியாக்குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணநாடார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்இறந்துபோனார். இவரது மனைவி பொன்னம்மாள். வயது 80.
இவர் சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவிலுள்ள தனது பேத்தியின் பூப்புனிதநீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் உடல்நிலைமிகவும் மோசமடைந்தது. அவர் பேச்சுமூச்சின்றி மயக்கமடைந்தார். இதனால் அவரது மகள், தனது தாய் இறந்து விட்டார் என்று நினைத்தார்.
உடனடியாக, கனகப்பபுரம், காணிமடம், அஞ்சுகிராமம், காணிமடம் பகுதியிலுள்ள தனது உறவினர்கள் அனைவருக்கும் தகவல் கொடுத்தார்.அவர்கள் அனைவரும் பொன்னம்மாளின் சொந்த ஊரான குமரி மாவட்டம் கனகப்பபுரம் வந்து சேர்ந்தனர்.
வேனில் பொன்னம்மாள்:
இதற்கிடையே இறந்த தனது தாயை வேனில் வைத்து சொந்த ஊரான கனகப்பபுரத்திற்குக் கொண்டு வந்தார் அவரது மகள் சரஸ்வதி.
வேன் சென்னை அருகே வந்த போது பொன்னம்மாளின் கண்கள் லேசாகத் திறந்து மூடின. அப்போது சரஸ்வதி தனது தாய் இறக்கவில்லை என்பதைஅறிந்து கொண்டு அவருக்கு குளுகோஸ் வாங்கிக் கொடுத்தார். குளுகோஸ் குடித்ததும் அவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கி விட்டார்.
உறவினர்கள் குதூகலம்:
வேன் கனகப்பபுரம் வந்ததும் பொன்னம்மாளின் வீட்டில் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அனைவரும் அவரது உடலைப் பார்க்கச் சென்றனர்.
ஆனால் பொன்னம்மாளோ சிரித்த முகத்துடன் வேனை விட்டு இறங்கினார். இதையடுத்து உறவினர்கள் திகைத்து நின்றனர்.
பின்னர் துக்கம் விசாரிக்க வந்த அவர்கள், இறந்ததாகக் கூறப்பட்ட பொன்னம்மாள் உயிருடன் எழுந்து வந்ததைக் கண்டு, இன்ப அதிர்ச்சியுடன் வீடுதிரும்பினர்.












Click it and Unblock the Notifications