தங்கம் வென்ற தங்கங்கள்
கேள்வி - பதில்
கே: நாங்கள் காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் - என்று மூப்பனார்கூறுகிறாரே?
ப: இன்னும் சரியாகச் சொல்வதானால் த.மா.கா. நாடுவது ஜெயலலிதா ஆட்சியில் காமராஜுக்கு பங்கு.
கே: அடையாள அட்டை இருந்தால்தான் இனி வாக்களிக்க முடியும் என்பதால், கள்ள ஓட்டுப்போட முடியாதல்லவா?
ப: இது தெரிந்துதான், பாதிக்கு மேல் அடையாள அட்டையே வழங்கப்படவில்லையே! அப்புறம் என்ன கவலை?
கே: தடா வழக்கையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற ஒரு மாநில அரசுக்கு உரிமை உண்டா?
ப: உண்டு - நீதிமன்ற அனுமதியுடன்.
கே: மேற்கு வங்காளத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றிய பெர்னாண்டசின் அறிக்கை ஒரு புளுகு மூட்டை - என்று ஜோதிபாசு கூறுவது குறித்து?
ப: பெர்னாண்டசின் அறிக்கையை மிகைப் பொட்டலம் என்று சொல்லலாமே தவிர, புளுகு மூட்டை என்று சொல்ல முடியாது. மேற்கு வங்க நிலைமோசம்தான் - அதை ஜோதிபாசு ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.
கே: நியாயம், நேர்மை, உண்மை, ஒழுக்கம் - இவற்றுக்கு இன்றும் மதிப்பு உள்ளதா?
ப: மதிப்பு உண்டு ; வேறெதுவும் கிடையாது.
கே: ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே, அவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் இல்லை என்றும், அவர்கள் அனைவரையும்வென்ற பலசாலிகளாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்களில் இருவர் மோதும் போது, ஒருவர் தோல்வி அடைகிறாரே அது எப்படி?
ப: எப்பேர்ப்பட்ட பலவானுக்கும் வீழ்ச்சி உண்டு என்பது மனித சிருஷ்டியின் விதி.
கே: பாரதி படம் பார்த்தீர்களா? உங்கள் அபிப்பிராயம் ...?
ப: நான் பார்க்கவில்லை.
கே: மேற்கு வங்காள மாநிலத்தில் என்ன நடக்கிறது?
ப: மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கிறது; மற்றபடி எதுவும் நடப்பதில்லை; அதுதான் மிகப் பெரிய குறை.
கே: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அரசு ஆராயும் என்று அத்வானி தெரிவித்துள்ளாரே?
ப: சும்மா மம்தாவிற்கு கொடுக்கப்படும் மிட்டாய் இது! வேறொன்றுமில்லை.
கே: கோயில்களில் குடமுழுக்கு நடத்தவதால் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் இறைவனையே சேரும், இறைவன் என்றால் தலைவர், தலைவர்என்றால் முதலமைச்சர் - என்று - அமைச்சர் தமிழ்குடிமகன் பேசியுள்ளாரே?
ப: அமைச்சர் இப்படியே பேசிக் கொண்டு போய், கடைசியில் சாமி என்றால் எஜமான் - எஜமான் என்றால் கலைஞர் -சாமி சிலை என்றால் கலைஞர்சிலை என்று கூறி கோயில்களில் இருக்கும் விக்ரகங்களை அகற்றி, முதல்வர் சிலைகளை வைத்து விடாமல் இருந்தால் சரி.
கே: கோட்டையை அ.தி.மு.க. நெருங்கிக் கொண்டிருகிறது என்று காளிமுத்து கூறியுள்ளாரே?
ப: ஏதாவது மனு கொடுக்கப் போகிறார்களோ, என்னவோ?
கே: இன்னும் நான்கு மாதங்களில் பதவி விலகப் போகும் கிளின்டணுடனான பேச்சு வார்த்தை நமக்கு எந்த விதத்தில் பயன்படும்?
ப: நான்கு மாதத்தில் விலகப் போவது கிளின்டண்தானே தவிர - அமெரிக்கா அல்ல.
கே: தங்களை கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கேட்கலாம் என்று நினைக்கிறேன். என்னசொல்கிறீர்கள்?
ப: 33 சதவிகிதம் என்ன - 3 சதவிகிதம் கூட எங்களுக்கு வேண்டாம்! நீயே சோவை வைத்துக் கொள் என்று பெண்களே கூறி விடுவார்கள்.நீங்கள்தான் செய்வதறியாது திகைக்க வேண்டியிருக்கும்.
கே: நெருப்பு வளையத்துக்குள் சிக்கியிருக்கும் கற்பூரத்தை, அது எரிந்து விடாமல் வெளியே எடுக்கும் வழியை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளத்தயார்என்று முதல்வர் கூறியிருக்கிறாரே? நீங்கள் ஒரு வழி சொல்லக்கூடாதா?
ப: தாராளமாகச் சொல்கிறேனே! நெருப்பு வளையத்திற்குள் கையை விடவேண்டும் ; கற்பூரத்தின் மீது கையை வைத்து, அதை அப்படியே மூடிக்கொண்டு,கையை வெளியே எடுக்க வேண்டும். கை வெந்து போகலாம் ; ஆனால் கற்பூரத்திற்கு ஒரு ஆபத்தும் இருக்காது.












Click it and Unblock the Notifications