நான் செய்த தவறுகள்...: ராஜ்குமார் உருக்கம்
பெங்களூர்:
காட்டிலிருந்து எந்த வித பிரச்சனையுமின்றி நான் திரும்பி வருவதற்காகப் பூஜைகள் பிரார்த்தனைகள் செய்த ரசிகர்கள் தான், நான் தலைவணங்கும் கடவுள்என்று நடிகர் ராஜ்குமார் கூறினார்.
நடிகர் ராஜ்குமாரை மீட்க கர்நாடக அரசு எடுத்த நடவடிககைக்காக முதல்வர் கிருஷ்ணா, காவல் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, நடிகர்ராஜ்குமார் ஆகியோருக்கு கர்நாடக வர்த்தக சபை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராஜ்குமார் பேசியதாவது:
என் மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிகிறது. நான் உயிருடன் திரும்பி வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காட்டில் 3 மாதங்கள் மிகவும்கஷ்டமாக இருந்தது.
என்னை மீட்பதற்காக முதல்வர் கிருஷ்ணா முதல் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு மிகுந்த சிரமத்தையும், கஷ்டத்தையும் கொடுத்துவிட்டேன்.
ரசிகக்கடவுள்:
ரசிகக் கடவுள்களுக்கும் மிகவும் துன்பம் கொடுத்து விட்டேன். எனக்காக நீங்கள் கோவில்களில் பூஜை செய்து என்னை மீட்டு வந்து விட்டீர்கள்.இனிமேல் நீங்கள்தான் எனது கடவுள்.
ராஜ்குமார் கன்னட நாட்டின் சொத்து. உங்களின் இந்த ஆரவாரம் என்னால் எப்போதும் மறக்க முடியாது.
காட்டிலிருந்து நாட்டுக்கு வந்த போது எனக்கு ஒரு புதுவித உணர்ச்சி ஏற்பட்டது. வீரப்பனின் ஆட்கள் என்னை மிகவும் நன்றாக நடத்தினார்கள்.கோபால் காட்டுக்கு வரும்போதெல்லாம் என்னை மீட்டுச் சென்று விடுவார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரால் என்னை மீட்கமுடியவில்லை.
நெடுமாறன்:
பின்னர் நெடுமாறன் காட்டுக்கு வந்து என்னை மீட்டார். என்னை விடுதலை செய்து உங்கள் முன் தோன்ற சாமி ராகவேந்திராவின் கருணைதான் காரணம்.
நான் காட்டில் இருந்த போது ரசிகர்களும், கலைஞர்களும் பூஜைகள் செய்து வேண்டினார்கள். அதை நான் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்.
காட்டு வாழ்க்கை என் மனசாட்சியை பரிசோதித்துப் பார்ப்பது போல் இருந்தது. அப்போது நான் செய்த தவறுகள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தேன்என்றார் ராஜ்குமார்.
கருணாநிதிக்கு கிருஷ்ணா நன்றி:
பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் கிருஷ்ணா பேசுகையில், ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியிடம் உதவிகேட்டோம். அவர் அனைத்து உதவிகளையும் செய்தார். முதலில் நக்கீரன் கோபாலை அனுப்பி ராஜ்குமாரை மீட்க அனைத்து உதவிகளையும் செய்தார்.
அதற்குப்பின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை அனுப்பி ராஜ்குமாரை மீட்க உதவி செய்தார். அவருக்கு என் சார்பிலும், கன்னட மக்களின்சார்பிலும் இந்த நல்ல நாளில் நன்றி கூறுகிறேன். இதைக் கூறுவதற்கு எனக்குக் கூச்சம் ஏதுமில்லை. மிகவும் வெளிப்படையாக அவருக்கு நன்றிகூறுகிறேன் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications