எதற்கெடுத்தாலும் குண்டாஸ்! குட்டு வாங்கிய அருண் ஐபிஎஸ்.. அதிரடி பணியிட மாற்றம்!
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தவெக ஆட்சியில் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார். இந்த மாற்றம் நடந்த 45 நாட்களில்.. தற்போது அவர் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பதில், புதிய இயக்குநராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருக்கும் மகேஸ்வரி, இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அருண் ஐபிஎஸ், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடெமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பணியிட மாற்றத்தின் பின்னணி
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை வீடு மற்றும் திருவண்ணமலை வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியிருந்தனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருந்தன.
அதேபோல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் ஆனந்த் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து இவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற சூழலும் உருவாகியிருக்கிறது.
காரணம் என்ன?
அடுத்தடுத்து பல முன்னாள் அமைச்சர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை டார்கெட் செய்திருக்கிறது. ஆனால் ரெய்டு தொடர்பான விஷயங்கள் லீக் ஆவதாகவும், விசாரணை குறித்த தகவல்கள் கசிவதாகவும் முதல்வரின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. இந்த பின்னணியில்தான் தற்போது அருண் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டிருககிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்றத்திடம் குட்டு
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பணியாற்றியபோது எதற்கெடுத்தாலும் குண்டாஸ் சட்டத்தை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக சிவில் வழக்கில்.. தொழிலதிபர் மீது குண்டாஸ் பயன்படுத்தியது நீதிமன்றத்தை டென்ஷன் ஆக்கியது. இதற்கு முன்னர், பத்திரிகையாளர்கள் சவுக்கு சங்கர் மற்றும் வராகி மீது குண்டாஸ் போடப்பட்டது. அப்போதே நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு, வராகி மீது போடப்பட்ட குண்டாஸை ரத்து செய்து, ரூ.50,000 அபராதமும் விதிக்க உத்தரவிட்டிருந்தது.
எதற்கெடுத்தாலும் குண்டாஸ்
ஆனாலும், அதற்கு பின்னர் தொழில் அதிபர் மீது குண்டாஸ் போடப்பட்டது நீதிமன்றத்தை அதிருப்தியடைய செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அருணை கடுமையாக கண்டித்திருந்தது. சிவில் வழக்கில் யாராவது குண்டாஸை பயன்படுத்துவார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தது. மட்டுமல்லாது இந்த வழக்கில் அருண் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை கொண்டு வந்த நீதிமன்ற அதிகாரிகளை 2 மணி நேரம் அருண் ஐபிஎஸ் காக்க வைத்திருந்தார். இதற்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இப்படியாக அருண் ஐபிஎஸ்-ஆ? அல்லது அருண் குண்டாஸா என்கிற அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications