அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
சென்னை:
ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே, எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை. அதை நிறைவேற்றுவோம் என்று எம்.ஜி.ஆர். கழகத் தலைவர்ஆர்.எம். வீரப்பன் கூறினார். (ஆனால், எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் வீரப்பன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை வீரப்பனுக்கு திடீரென நினைவுக்கு வந்தது ஏன் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!)
திண்டுக்கல்லில் நிருபர்களை சந்தித்த ஆர்.எம். வீரப்பன் கூறியதாவது:
கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவர் அரசு நிர்வாகத்தையேதனது நிறுவனமாக மாற்றி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புரிந்தார்.
மாநில அரசு அவர் மீது தொடுத்து உள்ள வழக்குகள் விரைவாக நடந்து வருகின்றன. ஒரு சில வழக்குகளில் தீர்ப்புகளும் வரத் துவங்கியுள்ளன. இருப்பினும்ஜெயலலிதா தனது பண பலத்தை வைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை தாமதப்படுத்துகிறார்.
ஆனால் மத்திய அரசு ஜெயலலிதா மீது தொடுத்த வழக்குகள் எல்லாம் மண்ணுக்குள் மறைந்த புதையல் மாதிரி ஆகிவிட்டது. 1996-ம் வருடம் அவர்மீது மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. 1998-ம் வருடம் மத்திய அரசில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரது கட்சியினரே மத்திய அமைச்சர்பதவியில் இருந்தனர். அவர்கள் இந்த வழக்குகளை முடக்க நினைத்தார்கள்.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசும் வேறு வேலைகளை பார்த்தார்களே தவிர இந்த வழக்குகளைத் துரிதப்படுத்தவில்லை. டி.டி.வி.தினகரன், 28 கோடி ரூபாயை தண்டனைத் தொகையாக மத்திய அரசுக்கு 45 நாட்களுக்குள் கட்ட வேண்டும். ஆனால் இது வரை பணத்தைக்கட்டவில்லை. இது குறித்த வழக்கைத் துரிதப்படுத்தவே நாங்கள் ஆர்பாட்டம் நடத்தினோம்.
எங்களது போராட்டம் தற்பொழுது வெற்றி அடைந்துள்ளது. அதன் படி வருகின்ற 21-ம் தேதி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், அரசியலில் தூய்மை வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். வருகின்ற தேர்தலில் ஜெயலலிதா கட்சியை சேர்ந்த அணியினர்முகத்தில் முகமூடி போட்டுக்கொண்டு தேர்தலைச் சந்திக்க வருவார்கள். அதனை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை ஜெயலலிதாவை அரசியலை விட்டு நீக்க வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவோம் என்றார் வீரப்பன்.












Click it and Unblock the Notifications