காஷ்மீர் சண்டை நிறுத்தம் .. வாஜ்பாய் மெளனம்
பெங்களூர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து கருத்துத் தெரிவிக்க, பிரதமர் வாஜ்பாய் மறுத்து விட்டார்.
கர்நாடகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் வாஜ்பாய் வெள்ளிக்கிழமை காலை மங்களூரிலிருந்து பெங்களூர் வந்தார்.
பெங்களூர் விமான நிலையத்தில், அவரைச் சந்தித்த நிருபர்கள், காஷ்மீர் சண்டை நிறுத்தம் நீட்டிப்பு, கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்சனை ஆகியவை குறித்து நிருபர்கள்கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்தார்.
வெள்ளிக்கிழமை முழுவதும் நான் பெங்களூரில் இருப்பேன். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று மட்டுமே அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை அவர் தேவனஹள்ளியில் அமையவுள்ள சர்வதேச விமானப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா கர்நாடகதலைமைச் செயலகம் உள்ள விதான சவுதா வரவேற்பு மண்டபத்தில் நடக்கிறது.
முன்னதாக, வியாழக்கிழமை கர்நாடகம் வந்த வாஜ்பாய் மங்களூர், உடுப்பி ஆகிய இடங்களுக்குச் சென்றார். உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் சாமிகும்பிட்டார்.
வெள்ளிக்கிழமை பெங்களூர் அருகேயுள்ள கும்பளகோடி என்ற இடத்தில், அமைக்கப்பட்டுள்ள வித்யா சவுதா பள்ளியைத் திறந்து வைக்கிறார்.அதற்குப்பின் ஒயிட்பீல்டில் ஸ்ரீசத்ய சாய்பாபா இன்ஸ்டிட்யூட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
மாலை 5.15 மணிக்கு விதான சவுதா வரவேற்பு மண்டபத்தில் சர்வதேச விமானநிலையப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications