மோட்டார் சைக்கிள் தராததால் மாப்பிள்ளை எஸ்கேப்: நின்றது திருமணம்
சென்னை:
வரதட்சணையாக கேட்ட மோட்டார் சைக்கிள் வராத காரணத்தால் கல்யாண மண்டபத்திலிருந்து கோபித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்ஒரு மாப்பிள்ளை.இதனால் திருமணம் நின்று போனது.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜாகிரா பானு. இவருக்கும், பாண்டிச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சகாபுதீன் என்பவரின் மகன் ஜியாவுர்ரஹ்மானுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இந்தக் கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடப்பதாக இருந்தது.
திருமண மண்டபத்தில் இரு வீட்டார் உறவினர்களும் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர்.
மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து, திருமணம் மட்டுமே பாக்கி என்ற நிலையில், மாப்பிள்ளை ஜியாவுர் ரஹ்மான், அவரது தந்தைசகாபுதீன் மற்றும் அவர்களின் உறவினர் முகம்மது யாசின் ஆகியோர் மணப்பெண் ஜாஹிரா பானுவின் தந்தை இஸ்மாயிலிடம்,வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும், இல்லாவிட்டால் கல்யாணம் கிடையாது என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன இஸ்மாயில் திடீரென எப்படி வாங்கித் தர முடியும் என்று கேட்டுள்ளார். ஆனால், பிடிவாதமாக இருந்த மூன்றுபேரும் திடீரென கல்யாண மண்டபத்திலிருந்து கிளம்பி விட்டனர். இதனால் அதிர்ச்சியுற்ற இஸ்மாயில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் புகாரைப் பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.
ஒரு மோட்டார் சைக்கிளுக்காக திருமணம் நின்று போனது அந்த மண்டபத்தில் கூடியிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.அந்த மணப்பெண்ணின் நிலை குறித்து அனைவரும் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications