தாக்குதலைப் படம் பிடித்த ரகசிய காமிராக்கள்
கொல்கத்தா:
கொல்கத்தாவின் அமெரிக்க மையத்தில் நடந்த தாக்குதலை அங்குள்ள ரகசிய காமிராக்கள் தெளிவாகப் படம்பிடித்துள்ளதாக போலீசார் கூறினர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இங்கு காவலுக்கு நின்ற போலீசார் மீது நடந்த தாக்குதலையும் ஒரு காமிராதெளிவாகப் படம் பிடித்துள்ளது.
அமெரிக்க மையத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு ரகசிய காமிரா மூலம் இந்தத் தாக்குதல் சம்பவம்முழுவதுமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
பதிவு செய்யப்பட்ட மாஸ்டர் வீடியோ கேசட் இன்னும் அமெரிக்க மையம்தான் வைத்துள்ளது. அந்தக் கேசட்டைஅவர்கள் தந்தால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை நாங்கள் விரைவில் பிடிப்பதற்கு அது உதவியதாக இருக்கும்என்று ஒரு கொல்கத்தா போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தேடுதல் வேட்டை தீவிரம்:
இதற்கிடையே தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் வேட்டை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ள 50 பேரிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
கொல்கத்தாவைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளரான அஷோக் பண்டாரி நேற்றிரவு கொல்கத்தா வந்துசேர்ந்தார்.
மேற்கு வங்காள மாநில உள்துறைச் செயலாளர் ஏ.கே. தேப் உள்பட பல்வேறு உயர் போலீஸ் அதிகாரிகளுடன்தீவிரவாதிகளைத் தேடும் முயற்சி குறித்து விவாதித்து வருகிறார்.
வழக்கம்போல் இயங்கும் அமெரிக்க மையம்:
இதற்கிடையே தாக்குதலால் விக்கித்துப் போன அமெரிக்க மையமும், அமெரிக்கத் தூதரக அலுவலகமும் இன்றுமீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.
இந்த 2 கட்டடங்களிலும் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 போலீசாரின் நிலைமைஇன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications
