சிறிது நேரத்தில் பதவியேற்கிறார் ஜெயலலிதா: ரஜினி வாழ்த்து
சென்னை:
இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
விழா நடக்கவுள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன்,மேயர் ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய்காந்த் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திரையுலகப் பிரபலங்கள், வாழப்பாடிராமமூர்த்தி, கி.வீரமணி உள்ளிட்ட பல கட்சிப் பிரமுகர்களும் வந்து அமர்ந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்து அதிமுக தொண்டர்கள் 500 பேரும் விழா மண்டபத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துச் செய்தியையும் பூங்கொத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த மண்டபத்தில் அமர்ந்துள்ளனர்.
கடந்தமுறை அவர் முதல்வரானபோது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால்,இம்முறை அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.
ஆளுநர் ராம் மோகன் ராவ், ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரைத்தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன.அரங்கத்தில் குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் பகுதியில் போலீஸார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பதவியேற்பு விழாவைக் காணும்வகையில் அரங்கத்திற்கு வெளியே பல இடங்களில் டிவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications