வி.எச்.பி. ரிவர்ஸ் பல்டி: சமரசத்துக்குத் தயார் என்கிறது
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று திடீர் பல்டி அடித்து காஞ்சி சுவாமிகளின் சமரசமுயற்சிகளை கேள்விக்குறியாக்கிய விஸ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் ரிவர்ஸ் பல்டி அடித்துள்ளது.
இப்போது நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று அறிவித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் மற்றும் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஆகியோர் வி.எச்.பியின் செயல்கள்குறித்து வெளிப்படையாகவே இன்று கண்டனம் தெரிவித்த பிறகே தனது நிலையில் இருந்து அந்த அமைப்புஇறங்கி வந்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம், அந்த இடத்தில் கோவில் கட்டுவதா இல்லைமசூதியைத் திரும்பக் கட்டுவதா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த இடத்தின் அருகே உள்ள பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத 67 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதியில் கோவில் கட்டப் போவதாக வி.எச்.பி. அறிவித்தது. இதற்கான பணி வரும் 15ம் தேதி தொடங்குவதாகஅறிவித்தது. 12ம் தேதி முதல் இதற்கான தூண்கள் இந்த இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் எனவும் அறிவித்தது.
இந்த இடம் இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துடன் சேர்த்துஇந்த இடத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. இந்த இடத்தில் யார் எதைக்கட்டினாலும் பிரச்சனை வரும் என்பதால் சி.ஆர்.பி.எப். படையின் 24 மணி நேர பாதுகாப்புடன் இந்த இடம்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு கோவில் கட்டுவோம் என வி.எச்.பி. கிளம்பியதால் பிரச்சனை உருவானது. இதற்காககரசேவகர்களை அயோத்தியில் குவித்து வருகிறது.
இதனால் பதற்றம் உருவானாதால் காஞ்சி சுவாமிகள் மூலம் வி.எச்.பியிடம் பேச்சு நடத்தப்பட்டது. அவர்வி.எச்.பியிடம் பேசினார். பின்னர் இஸ்லாமிய சட்ட வாரியத்துடனும் பேசி ஒரு சமரச திட்டத்தைக் கூறினார்.
அதன்படி கோவில் கட்ட 67 ஏக்கரில் ஒரு பகுதியை வி.எச்.பிக்குத் தர இஸ்லாமியர்கள் முன் வர வேண்டும்.
அதே போல பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும் அதை வி.எச்.பி. ஏற்கவேண்டும்.
இது தான் காஞ்சி சுவாமிகள் பார்முலா. இதை வி.எச்.பி. ஏற்றது. இதையடுத்து நிலத்தைத் தரும் யோசனையைஒப்புக் கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்லாமிய சட்ட வாரியம் கூறியது.
ஆனால், வி.எச்.பி. திடீரென தனது நிலையில் இருந்து மாறி அது ஏற்கனவே கூறி வருவது போல, நீதிமன்றத்தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என நேற்று அறிவித்தது.
இதையடுத்து இஸ்லாமிய சட்ட வாரியமும் இடம் தர அனுமதிக்க மாட்டோம் என இன்று அறிவித்தது.
இதனால் காஞ்சி பார்முலா தோற்கும் நிலை ஏற்பட்டது.
விளக்கம் கேட்ட பிரதமர்:
இதனால் கடுப்பான பிரதமர் வாஜ்பாய், நீதிமன்றத்தை மதிக்கும் விஷயத்தில் உங்கள் நிலை என்ன என்று கேட்டுவி.எச்.பியின் தலைவர் அசோக் சிங்கலுக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதத்தை அனுப்பினார்.
எரிச்சலடைந்த காஞ்சி சுவாமிகள்:
அதே நேரத்தில் இந்தப் பிரச்சனையில் தன்னிடம் ஒன்று கூறுவதும் வெளியில் ஒன்று பேசுவதுமாக செயல்பட்டவி.எச்.பி. மீது காஞ்சி சுவாமிகளும் எரிச்சலடைந்துள்ளார்.
இன்று அகமதாபாத் சென்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில், அயோத்தி விவகாரத்துக்கும் வி.எச்.பிக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்குத் தான் முழு உரிமை உண்டு. நான்வி.எச்.பியின் சம்மதம் எதையும் கேட்கவில்லை. அவர்களிடம் எந்த உறுதிமொழியையும் கேட்கவும் இல்லை.எதையும் எழுதி வாங்கவும் இல்லை.
நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக ராமஜென்மபூமி அறக்கட்டளை என்னிடம் எழுதியே தந்துவிட்டது. எனக்கு அதுபோதும். வி.எச்.பி. பற்றி கவலையில்லை என்றார் காஞ்சி சுவாமிகள்.
நெருக்கப்பட்ட வி.எச்.பி.:
இதையடுத்து வேறு வழியில்லாமல் தான் தனது நிலையில் இருந்து வி.எச்.பி. இன்று மாலை மீண்டும் இறங்கிவந்தது. கோவில் கட்ட நிலத்தைத் தந்தால் நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவணங்கத் தயார் என்று கூறியுள்ளது.
வி.எச்.பியின் இந்த செயல்களால் அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டதை இந்து மதத் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் கோவில் கட்ட பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தைத் தர ஒப்புக் கொள்ளலாமா என்பது குறித்து வரும்ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய சட்ட வாரியத்தின் தேசிய கமிட்டி கூடி விவாதிக்கிறது.
அதற்குள் வி.எச்.பி. இன்னும் எத்தனை பல்டி அடிக்குமோ தெரியவில்லை.
நிலம் தரும் விஷயத்தில் மத்திய அரசை நெருக்கிய வி.எச்.பிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளமதசார்பற்ற கட்சிகள் ரூபத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், மத்தியில் தங்கள் நட்பு கட்சியான பா.ஜ.க.ஆண்டாலும் கூட நினைத்ததை சாதிக்க முடியாத நிலையில் வி.எச்.பி. உள்ளது. அதிகமாக நெருக்கினால் பா.ஜ.க.ஆட்சி பறிபோகும்.
இப்போதுள்ள நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாக அறிவித்து கோவில் கட்ட முஸ்லீம்கள்சம்மத்துடன் நிலத்தை வாங்கிக் கொள்வது தான் அந்த அமைப்பின் முன் உள்ள ஒரே வழியாகும்.
இதையடுத்துத் தான் இன்று கூடிய வி.எச்.பி. தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications