அடுத்த ஜனாதிபதி: கடும் குழப்பத்தில் மத்திய அரசு கூட்டணி
டெல்லி:
அடுத்த ஜனாதிபதியை முடிவு செய்ய பிரதமரின் இல்லத்தில் இன்று நடக்கவிருந்த தேசிய ஜனநாயகக் கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. எதிர்க் கட்சிகளுடன் மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இதுதொடர்பாக கருத்து வேறுபாடுகள்ஏற்பட்டுள்ளன.
இது குறித்து விவாதிக்க நேற்று பா.ஜ.க. தலைவர்கள் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடந்தது. இதில் பலர் மகாராஷ்டிர ஆளுநர்அலெக்சாண்டரை ஆதரித்தனர். பிரதமரும் அவரையே ஆதரிக்க முடிவெடுத்தார்.
ஆனால், அவரை காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்க்கும் என்பதால் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தைஆதரிக்கலாம் என பிற தலைவர்கள் கூறினர். இறுதியில் வாஜ்பாய் யாரைச் சொன்னாலும் ஏற்போம் என அவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகாந்தைத் தான் ஜனாதிபதியாக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார்.
அடுத்த ஜனாதிபதியை தேர்வுசெய்வதில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு மிக அவசியம். மொத்த ஓட்டில் 5 சதவீதம் இந்தக் கட்சியிடம்உள்ளது. தெலுங்கு தேசம் ஆதரித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 53 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். இல்லாவிட்டால் 48 சதவீத ஓட்டுதான் கிடைக்கும்.
தெலுங்கு தேசம் தவிர்த்த எதிர்க் கட்சிளிடம் 47 சதவீத ஓட்டுகள் உள்ளன. அரசை எதிர்த்து இவர் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்தால் எதிர்க்கட்சி வேட்பாளர் தான் வெல்வார்.
இதை பிரதமரைச் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார் நாயுடு. இந் நிலையில் இது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் இன்று பிரதமரின் இல்லத்தில் கூட்டப்பட்டிருந்தது.
முதலில் டெல்லி வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறியிருந்த நாயுடு திடீரென தனது பயணத்தைரத்து செய்துவிட்டார். கிருஷ்ணகாந்தை விட்டுவிட்டு அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க வாஜ்பாய் திட்டமிடுவதாக நாயுடு கருதுகிறார்.இதனால் தான் தனது பயணத்தை ரத்து செய்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால், பிரதமர் யாரை முடிவு செய்தாலும் அவரை ஏற்பதாக நாயுடு கூறியுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நாராயணனுக்கு பாஸ்வான் ஆதரவு:
குடியரசுத் தலைவர் தேர்தலில் கே.ஆர்.நாராயணன் மீண்டும் போட்டியிட்டால் லோக் ஜன சக்தி கட்சி அவருக்கு ஆதரவாக வாக்களிக்கும்என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருவர் 2-வது முறை போட்டியிடக் கூடாது என்றுஅரசியல் சட்டத்தில் இல்லை. அப்படிக் கூற மத்திய அரசுக்கும் அதிகாரமும் இல்லை.
கே.ஆர்.நாராயணன் மீண்டும் போட்டியிட முடிவு செய்தால் அவரை லோக் ஜன சக்தி ஆதரிக்கும் என்றார்.
ஜெவுடன் ஆலோசனை:
இந் நிலையில் டெல்லி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் வாஜ்பாய் பேச்சு நடத்துகிறார். முன்னதாக இன்றும் அவர் ஜெயலலிதாவுடன்தொலைபேசியில் பேசுவார்.
இதற்கிடையே தங்களிடம் பிரதமர் விரிவான ஆலோசனை நடத்தவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. அவை தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும்வகையில் யாரையாவது போட்டியில் நிறுத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications