ஸ்ரீவில்லிபுத்தூரில் கொளுத்தும் வெயிலில் 10,000 நெசவாளர்கள் உண்ணாவிரதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தங்களுடைய மனுக்களுக்கு தமிழக அரசு பதிலளிக்காததைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று 10,000க்கும்மேற்பட்ட நெசவாளர்கள் கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள சுந்தரபாண்டியம் மற்றும் இராமச்சந்திரபுரம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான மக்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாகவே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அந்தந்தப் பகுதிகளில்உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் அவர்கள் உறுப்பினர்களாகவும் இருந்து வந்தனர்.
இந்த சங்கங்கள் மூலம் அவர்கள் கைத்தறி மூலம் நெய்யும் சேலைகள், வேஷ்டிகள் போன்றவை காதி கிராப்ட்உள்ளிட்ட பல கடைகளில் விற்கப்பட்டு வந்தன.
ஆனால் சமீப காலமாக கைத்தறித் துணிகளுக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டது. மேலும் ஒவ்வொரு ஆண்டும்ஏழைகளுக்கு இலவச கைத்தறி சேலைகள் மற்றும் வேஷ்டிகள் வழங்கும் திட்டத்தையும் சமீபத்தில் தமிழக அரசுநிறுத்தி விட்டது.
இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்களுக்கு மாற்று வழி காண ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல மனுக்களையும் நெசவாளர்கள் அனுப்பியிருந்தனர்.
ஆனால் எந்த மனுவுக்கும் தமிழக அரசு பதில் தரவில்லை. இவ்வாறு தொடர்ந்து தங்களுடைய மனுக்களுக்குப்பதிலளிக்காமல் இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அப்பகுதி நெசவாளர்கள் முடிவுசெய்தனர்.
அதன்படி இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேரடித் தெருவில் சுமார் 10,000 நெசவாளர்கள் கூடினர்.அவர்களுக்காக சுமார் அரை கி.மீ. தூரத்திற்குப் பந்தல் போடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த இடமும் போதாமல் ஏராளமான நெசவாளர்கள் பந்தலுக்கு வெளியே கொளுத்தும் வெயிலில்வாடியவாறே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
தங்களுடைய இந்த உண்ணாவிரதத்துக்காவது தமிழக அரசு பதில் சொல்லுமா என்று ஆயிரக்கணக்கான ஏழைநெசவாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications