வீரப்பனுக்கு ரூ.30 கோடி தரப்பட்டது: ஜெ.
சென்னை:
கடந்த 2000ம் ஆண்டில் கர்நாடக அரசு வீரப்பனுக்கு ரூ.30 கோடி கொடுத்து தான் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று குற்றம் சாட்டினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
கடந்த 2000ம் ஆண்டு வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரை மீட்பதற்காக அவனுக்கு கர்நாடக அரசு ரூ.30 கோடி வரை கொடுத்துள்ளது.
ஆனால் யார் யாரெல்லாம் சேர்ந்து அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள் என்றோ எவ்வாறு அந்தப் பணம் வீரப்பன் கைக்குப் போய்ச் சேர்ந்தது என்பது குறித்தோ விசாரணையின் மூலம் தான் தெரிய வரும்.
கர்நாடக அரசே நேரடியாக இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் இது தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.
வீரப்பனுடன் பேச்சு கிடையாது:
இதற்கிடையே வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்கும் பணியில் அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவரை உயிருடன் மீட்பது தான் இப்போதைக்கு அனைவருடைய நோக்கமாகும்.
ஆனாலும் இது தொடர்பாக வீரப்பனுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் தமிழக அரசு ஈடுபடாது. இது தொடர்பாக தமிழக அரசு தூதரை அனுப்பப் போவதில்லை. தூதர் அனுப்புவது குறித்து கர்நாடக அரசிடம் ஏதாவது திட்டம் இருந்தால் அதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
வீரப்பனிடமிருந்து ஒரு கேசட் வந்துள்ளதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா என்னிடம் டெல்லியில் கூறினார். இருந்தாலும் அந்தக் கேசட்டில் அவன் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை என்றும் கிருஷ்ணா கூறினார்.
ஆனால் வீரப்பனிடமிருந்து இரண்டாவது கேசட் எதுவும் வந்ததா என்பது குறித்து அவரோ கர்நாடக அரசோ என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் நாகப்பா கடத்தல் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக அரசைத் தொடர்பு கொண்டு வருகிறது.
நாகப்பாவின் மனைவி பரிமளா நாளை சென்னையில் என்னைச் சந்திக்கவுள்ளார். நாகப்பாவை மீட்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நான் அவரிடம் எடுத்துக் கூறுவேன்.
புலிகளுடன் வீரப்பனுக்கு தொடர்பு:
வீரப்பனுக்கு புலிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
மேலும் அவனுக்கு தமிழர் விடுதலைப் படையினருடனும், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுடனும் தொடர்பு உள்ளது.
வீரப்பனுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்தும் தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"புலிகள் காடும் வீரப்பன் காடும்":
இலங்கையில் புலிகள் ஒளிந்துள்ள யாழ்ப்பாணக் காட்டுப் பகுதி சுமார் 1,000 சதுர கி.மீ. பரப்பளவு தான் கொண்டது. அந்த இடத்தில் பதுங்கியுள்ள பிரபாகரனையே இலங்கையின் முப்படைகளும் சேர்ந்தும் கூட பிடிக்க முடியவில்லை.இலங்கை படைகள் தவிர இந்தியாவிலிருந்து அங்கு சென்ற அமைதிப் படையினரால் கூட அந்த 1,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஒளிந்துள்ள பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை.
இப்படி இருக்கும் போது அந்தக் காட்டுப் பகுதியை விட 17 மடங்கு அதிகமுள்ள தமிழக-கர்நாடக-கேரள எல்லையில் அமைந்துள்ள 17,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காட்டுக்குள் வீரப்பன் பதுங்கியுள்ளான்.
இந்த அடர்த்தியான காட்டுப் பகுதியில் வீரப்பனைத் தேடுவது என்பது மிகவும் சிரமமான காரியம் என்பதால் தான் இவ்வாறு நான் கூறுகிறேன்.
மேலும் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் சுமார் 1,600 அதிரடிப்படையினர் தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய காட்டுப் பகுதியில் அவர்களால் அவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் வீரப்பனைப் பிடித்து விட முடியாது.
தமிழக அதிரடிப்படை தீவிர வேட்டை:
ஆனாலும் தமிழக அதிரடிப்படையினர் அவனைப் பிடிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 300 அதிரடிப்படையினர் 30 குழுக்களாகப் பிரிந்து கர்நாடக எல்லைப் பகுதியில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இன்னும் வீரப்பன் கர்நாடக எல்லைக்குள் தான் இருக்கிறான். தமிழக எல்லைப் பகுதிக்குள் வர முயற்சித்தால் அவன் நிச்சயம் தமிழக அதிரடிப்படையினரிடம் பிடிபடுவான்.
காட்டுப் பகுதியில் நன்கு பயிற்சி பெற்ற பாரா மிலிட்டரியைச் சேர்ந்த கமாண்டோ படையினரையும் நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications