காவிரி விவகாரத்தில் காங், பா.ஜ.க. நடத்தும் ஓட்டு அரசியல்
சென்னை:
கர்நாடகத்தில் செல்வாக்கோடு விளங்கும் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் காவிரி விஷயத்தில் தமிழகத்தை தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி இப்போது கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ளது. அங்கு பா.ஜ.கவுக்கும் செல்வாக்கு உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த இருகட்சிகளுக்கும் எந்தப் பலமும் இல்லை.
இதனால் அவர்கள் கர்நாடகத்தில் உள்ள ஓட்டுக்களை மனதில் வைத்துக் கொண்டு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இருகட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு கர்நாடகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகின்றன.
மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க., அல்லது ஜனதா தளம் என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடகத்தைத் தான் ஆதரிக்கின்றன.தமிழகத்தில் இந்த மூன்று கட்சிகளுக்கும் ஓட்டுக்கள் கிடைக்கப் போவதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றன.
இதனால் தான் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்கிறேன்.
நான் பா.ஜ.கவை நெருங்கி வருவதாகக் கூறுவது சரியல்ல. பிரச்சனைகள் அடிப்படையில் தான் பா.ஜ.கவை ஆதரிக்கிறேன். முதலில்பி.சி.அலெக்சாண்டர் பெயரைச் சொல்லி அவரை ஜனாதிபதியாக்க என்னிடம் ஆதரவு கேட்டார் பிரதமர் வாஜ்பாய். ஆனால், ஆதரிக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன்.
பின்னர் டாக்டர் அப்துல் கலாமுக்கு வாஜ்பாய் ஆதரவு கேட்டபோது தான் நான் ஒப்புக் கொண்டேன்.
அதே போல ராஜஸ்தானின் முன்னாள் முதல்வராக இருந்த பைரோன் சிங் செகவாத் எனக்கு நன்கு அறிமுகமானவர். முதல்வராகஇருந்தபோது அவரை பல முறை சந்தித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.
இதனால் தான் அவரை ஆதரித்தேன். பா.ஜ.கவுக்காக அவரை ஆதரிக்கவில்லை,
ஆனால், திமுக தலைவர் கருணாநிதி தான் காங்கிரஸ் பக்கமாக சாய்ந்து வருகிறார். இது எனக்குத் தெரியும். ஆனால் இதனால் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.
தேசிய அரசியலில் இனி அதிக கவனம் செலுத்தப் போகிறேன். பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுக்கும் மாற்றாக ஒரு அணியை நாம் உருவாக்கவேண்டும்.
தஞ்சாவூரில் ஒரு சிறுவன் பட்டினியால் இறந்ததாகக் கூறுவது தவறு. அவன் உடல் நலமில்லாமல் இறந்துள்ளான். அந்தச் சிறுவனின்குடும்பத்துக்கு கடந்த வாரம் தான் 20 கிலோ ரேசன் அரிசியும், மாற்று வேலை வாய்ப்புத் திட்டம் மூலமாக 15 கிலோ அரிசியும்தரப்பட்டது. பட்டினி சாவுகள் நடக்கும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாகவில்லை.
வில்வநாதன் என்னை முன்னாள் முதல்வர் என்று சொன்னதால் அமைச்சர் பதவியை விட்டு நீக்கவில்லை. இந்த விவரமே என் பார்வைக்குவரவில்லை.
குழந்தைகளை குழியில் புதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்ட துரைராஜ் அவராகவே தான் ராஜினாமா செய்தார். அந்தத்திருவிழாவுக்குத் தடை விதிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications