குஜராத்தில் பிரச்சாரம் முடிகிறது: வெல்லப் போவது யார்?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது. அங்கு பாரதிய ஜனதா காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

6 மாதத்துக்கு முன் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்ததையொட்டி அங்கு பெரும் மதக் கலவரம் மூண்டது. கிட்டத்தட்ட 3 மாதம்நடந்த மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

பெண் குழந்தைகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கில் வாள்கள், கத்திகள், அரிவாள்களுடன் முஸ்லீம்களின்பகுதிகளில் நுழைந்த விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., பஜ்ரங் தள் தொண்டர்கள் மக்களை வெட்டிக் கொன்றனர். வீடுகளைசூறையாடினர். கற்பழிப்புகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கலவரத்தை பா.ஜ.க. முதல்வரான நரேந்திர மோடி அடக்கத் தவறினார். அவரே வன்முறையைத் தூண்டியதாக குற்றச்சாட்டுஎழுந்தது.

கே.பி.எஸ். கில் நிறுத்திய கலவரம்:

மோடியை தொடர்ந்து ஆதரித்த மத்திய அரசு எதிர்க் கட்சிகள் மற்றும் வெளிநாடுகளின் நெருக்குதலால் முன்னாள் பஞ்சாப் டி.ஜி.பியானகே.பி.எஸ். கில்லை குஜராத்துக்கு அனுப்பியது. பாதுகாப்புப் பணியை அவர் தனது கையில் எடுத்த பின்னர் தான் ராணுவத்தின் உதவியுடன்மதக் கலவரத்தை அடக்கினார். கலவரத்தை மாநில போலீஸ் அடக்கத் தவறியதாக அவரே குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் இந்த மதக் கலவரத்தால் தனக்கு கிடைத்த அரசியல் ஆதாயத்தை மனதில் வைத்து சட்டசபையை திடீரென கலைத்தது பா.ஜ.க.அரசு. உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியது.

தேர்தல் கமிஷன்- பா.ஜ.க. மோதல்:

ஆனால், அதை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை. குஜராத்தில் தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்று கூறி நரேந்திர மோடிக்கு ஆப்புவைத்தது. வீடுகள் எரிக்கப்பட்டதாலும் வன்முறைகளாலும் லட்சக்கணக்கான சிறுபான்மையினரும் இந்துக்களும் கூட முகாம்களில் வசித்துவரும் நிலையில் தேர்தலை நடத்த முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து அவரை கிருஸ்துவர் என்று கூறி வம்புக்கு இழுத்தது பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு பா.ஜ.கவினரை அடக்கினார்.உடனே தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்குப் போட்டது.

ஆனால், தேர்தல் கமிஷன் எப்போது தேர்தல் நடத்துமோ அப்போது நடத்தலாம் என நீதிமன்றமும் பா.ஜ.கவுக்கு ஆப்பு வைத்தது.

ஆச்சரியம் தந்த காங்கிரஸ்:

இந் நிலையில் குஜராத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பியது. இதையடுத்து டிசம்பர் 12ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன்முடிவு செய்தது.

முதலில் தேர்தலில் மிக எளிதாக வென்றுவிடலாம் என்ற நிலையில் இருந்தது பா.ஜ.க. ஆனால், கடந்த ஒரு மாதமாக நடந்த தீவிரபிரச்சாரத்தில் காங்கிரஸ் மிக வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

ரயில் எரிப்பு, பாகிஸ்தானின் தீவிரவாதம் ஆகியவற்றை மட்டுமே பா.ஜ.க. திரும்பத் திரும்ப தனது பிரச்சாரத்தில் பேசி வந்தது. ஆனால்,காங்கிரஸ் அம் மாநிலத்தின் செளராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் நிலவி வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை கையில் எடுத்தது. மேலும்மதக் கலவரத்தால் குஜராத்தின் தொழில்துறை நசிந்துபோய் உள்ளதையும் லட்சக்கணக்காணோர் வேலை இழந்து இருப்பதையும் காங்கிரஸ்முன் வைத்து பிரச்சாரம் செய்தது.

மதவாதத்தை எதிர்க்க ஜாதிவாதம்:

இது தவிர குஜராத்தின் ஜாதி விவகாரத்தை காங்கிரஸ் கையில் ஏந்தியுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க. முதல்வராக இருந்துகேசுபாய் படேலை தூக்கிவிட்டுத் தான் நரேந்திர மோடியை முதல்வராக்கினார் துணைப் பிரதமர் அத்வானி.

படேல் இனத்தினர் குஜராத்தின் மிக பலம் பொறுந்திய சாதியினர் ஆவர். இதனால் இந்தத் தேர்தலில் கேசுபாய் படேல் சரிவர பிரச்சாரம்செய்யவில்லை. இதனால் படேல் சமூகத்தினரின் ஓட்டுக்களை பா.ஜ.க. இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக படேல்கள் நிறைந்தசெளராஷ்டிரா பகுதியில் உள்ள 58 தொகுதிளில் கடந்த தேர்தல்ல் 52 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது.

ஆனால், படேல்கள் ஆதரவை இழந்துள்ள பா.ஜ.க. இங்கு பெரும் தோல்வியை சந்திக்கும் என்று தெரிகிறது.

வகேலாவின் ஜாலம்:

இது தவிர ஆதிவாசிகள், தலித்கள், படேல்கள், சத்திரிய இன மக்கள் ஆகியோருக்கு காங்கிரஸ் இடங்களை வாரி இறைத்துள்ளது.படேல்களுக்கு இணையான சாதி பலம் கொண்ட சத்திரிய இனத்தைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலாவை காங்கிரஸ் வளைத்தது.

30 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.கவில் இருந்தவர் வகேலா. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டதால் கட்சியையேஉடைத்து முதல்வரானார். தனியாக கட்சியும் நடத்தி வந்தார். இப்போது அதை காங்கிரசுடன் இணைத்துவிட்டார். அவரை மாநிலகாங்கிரஸ் தலைவராகவும் அடுத்த முதல்வராகவும் நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

வகேலா தலைமையில் காங்கிரஸ் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க. மதத்தை கையில் எடுக்க, ஜாதியைக் கையில்எடுத்து புகுந்து விளையாடி வருகிறது காங்கிரஸ்.

இதனால் முதலில் மிக எளிதான வெற்றி அடையும் நிலையில் இருந்த பா.ஜ.க. மிக வேகமாக ஆதரவை இழந்து வருகிறது. குஜராத்தில்மொத்தம் 182 இடங்கள் உள்ளன.

அத்வானியைவிட சோனியாவுக்கு கூட்டம்:

கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிக்கு மிகப் பெரும் அளவில் கூட்டம் கூடியது. அவருக்கு இணையாகசோனியா காந்திக்கும் பெரும் கூட்டம் கூடியது. இது காங்கிரசையே ஆச்சரியத்தில் ஆழ்த்த, சோனியாவின் பொதுக் கூட்டங்கள்எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய அதிர்ச்சியாக துணைப் பிரதமர் அத்வானிக்கு மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது.பா.ஜ.கவுக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி சிக்னல் இது தான். இதையடுத்து பிரதமர் வாஜ்பாயை பிரச்சாரத்தில் இறக்கியது பா.ஜ.க.

ஆனால், மோடியின் தீவிர மதவாதம் மற்றும் அவரே நடத்திய கலவரத்தால் எரிச்சலடைந்திருந்த வாஜ்பாய் குஜராத்தில் தேர்தல்பிரச்சாரத்துக்கு வர மறுத்தார். அவரது மனதை கரைய வைத்து கடைசி நேரத்தில் பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தனர்.

கருத்துக் கணிப்புகள்:

கடந்த மாதம் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.கவுக்கு 120 முதல் 130 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்தது.ஆனால், அதே பத்திரிக்கை இந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.கவுக்கு 100 முதல் 110 இடங்கள் கிடைக்கும் என்றுகூறியுள்ளது.

ஜீ டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் 85ல் இருந்து 95 இடங்களைப் பிடிக்கலாம் என்று கூறியுள்ளது.

த வீக் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் இரு கட்சிகளும் 85ல் இருந்து 95 இடங்களைப் பிடிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

அவுட் லுக் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு காங்கிரஸ் 110 இடங்களைப் பெரும் என்றும் பா.ஜ.க. 70 இடங்களுக்கும் குறைவாகவேபெரும் என்றும் தெரிவித்துள்ளது.

மதக் கலவரத்தை வைத்து ஆதாயம் அடையலாம் என்று நினைத்த பா.ஜ.கவை ஜாதியை வைத்து மடக்கியிருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரசின் வித்தியாச பிரச்சாரம்:

மதக் கலவரம் குறித்தோ, முஸ்லீம்களுக்கு ஆதரவாகவோ காங்கிரஸ் பேச்சே எடுக்கவில்லை. அப்படி செய்திருந்தால் பா.ஜ.க. அதைஎதிர்த்து பதிலடி பிரச்சாரம் செய்திருக்கும். ஆனால், குடிநீர் பிரச்சனை, வேலை வாய்ப்பு, கூட்டுறவு வங்கிகளில் நடந்த ஊழலால் 18 லட்சம்குடும்பங்கள் பாதிக்கப்பட்ட விவகாரம், மாநில அமைதி என காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய பா.ஜ.க. திகைத்துப் போய் நிற்கிறது.

மேலும் காங்கிரசும் லேசான இந்துத்துவாவை கையில் எடுத்துள்ளது. அம்பாஜி தேவி ஆலயத்தில் போய் வணங்கிவிட்டுத் தான் சோனியாபிரச்சாரத்தை ஆரம்பித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ்சில் இருந்து வந்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் சங்கர்சிங் வகேலா, பா.ஜ.கவுக்குஇணையாகவே இந்துத்துவா ஆதரவு பிரச்சாரம் செய்து வருகிறார்.

முஸ்லீம்கள் ஓட்டு எப்படியும் காங்கிரசுக்குக் கிடைக்கப் போவது நிச்சயம் என்ற நிலையில் முடிந்த அளவு இந்து ஓட்டுகளை கவரும்வேலையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. காங்கிரஸ் வாங்கும் ஒவ்வொரு இந்து ஓட்டும் பா.ஜ.கவுக்குத் தான் வேட்டு வைக்கும்.

லாலு, பாஸ்வான், மாயாவதி:

மேலும் தலித் ஓட்டுக்களைக் கவர ராம்விலாஸ் பாஸ்வானை காங்கிரஸ் கொண்டு வந்தது. இதை எதிர்கொள்ள உ.பி. முதல்வர்மாயாவதியை பா.ஜ.க. இழுத்து வந்தது.

காங்கிரசின் ஆதிவாசிப் பிரிவைச் சேர்ந்த முதல்வரான அஜீத் ஜோகி குஜராத்தின் ஆதிவாசிப் பகுதிகளில் கிட்டத்தட்ட 15 நாட்களாக தங்கிஓட்டு வேட்டையாடினார். இது தவிர பிற்படுத்தப்பட்டவர்கள், யாதவ் இன மக்களின் ஓட்டுகளை வாங்க பிகார் முதல்வர் லாலு பிரசாத்யாதவையும் காங்கிரஸ் இழுத்து வந்தது. அவரது நையாண்டிப் பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படியாக பா.ஜ.கவின் மதவாத அரசியலை, காங்கிரஸ் ஜாதிவாத அரசியலை வைத்து மிக வெற்றிகரமான பிரச்சாரம் நடத்திமுடித்துள்ளது.

கவலையில் பா.ஜ.க., நம்பிக்கையில் காங்.

இதனால், மிகுந்த நம்பிக்கையுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த பா.ஜ.க. பிரச்சாரம் முடியும் கடைசி நாளான இன்று நம்பிக்கை இழந்து நிற்கிறது.

நம்பிக்கையே இல்லாமல் பிரச்சாரச்தை ஆரம்பித்த காங்கிரஸ் மிக உற்சாகத்துடன் பிரச்சாரத்தை முடித்துள்ளது.

ஆனால், நரேந்திர மோடி என்ற தனி மனிதருக்கு குஜராத்தில் ஆதரவு பல மடங்கு பெருகி உள்ளதை எல்லா கருத்துக் கணிப்புகளுமே ஒப்புக்கொண்டுள்ளன. இதனால், குஜராத் தேர்தல் முடிவு வரும் வரை காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு திக்.. திக்.. தான்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+