கேவலமான அரசியல் தான் காவிரிப் பிரச்சனைக்குக் காரணம்: மேதா பட்கர்
திருச்சி:
தேசிய அளவில் பல ஆயிரம் கோடி செலவில் நதிகளை இணைக்கும் திட்டம் வீண் செயல் என சுற்றச்சூழல் ஆர்வலரும் சமூகசேவகியுமான மேதா பட்கர் கூறியுள்ளார்.
நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பல அணைகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்காக தொடர்ந்துபோராடி வருகிறார் பட்கர். இதற்காக பலமுறை தொடர் உண்ணாவிரதமும் உடலை வருத்தும் போராட்டங்களையும் நடத்திவருபவர் இவர்.
இவரது முயற்சியால் தான் அணைக் கட்டுத் திட்டங்களால் குடிபெயர்ந்த லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு உரிய நிவாரணம்கிடைத்தது. மேலும் நிவாரணம் கிடைக்காத மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது சமூகப் போராட்டங்களுக்காகபல சர்வதேச விருதுகளையும் வென்றவர்.
மக்கள் இயக்க தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மேதா பட்கர் திருச்சி வந்துள்ளார். அங்கு நிருபர்களிடம் அவர்பேசுகையில்,
இந்தியா போன்ற ஒரு நாடு பல ஆயிரம் கோடிகளை நதிகள் இணைப்புத் திட்டத்தில் போடுவது பெரும் வீண் செயல். இதனால்மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பெரும் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
நாட்டின் பெரும்பாலான உள் பகுதிகளில் அடிப்படைத் தேவையான சாலைகள் இல்லை. மின்சாரம் இல்லை. இந்த அடிப்படைஅவசியத் தேவைகளைச் செய்து தர அரசிடம் பணமில்லை.
ஆனால், இப்போது ஆயிரக்கணக்கான கோடிகளை நதிகள் இணைப்புக்கு செலவிடப் போகிறார்களாம். இதனால் வெள்ளமும்சுற்றுச்சூழல் சீர்கேடும் தான் மிஞ்சப் போகிறது. மிகப் பெரிய நதிகளின் இயற்கை ஓட்டத்தை மனிதன் மாற்றி அமைப்பதுநல்லதல்ல. இதனால் பல பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
இதற்குப் பதிலாக சிறிய நதிகளை இணைக்கலாம். இருக்கும் நீரை சரியாக பயன்படுத்த முயற்சிக்கலாம். நீர் பயன்பாட்டுநிர்வாகத்தை சரி செய்யலாம்.
காவிரியைப் பொறுத்தவரை இது நீர் பிரச்சனை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் பிரச்சனை. இந்த அரசியல்வாதிகளின்தொல்லையும் இடையூறும் இல்லாவிட்டால் காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மிக வேகமாக சங் பரிவாரங்களை நோக்கி நகர்ந்து வருகிறார். அந்த மதத் தீவிரவாதிகளின்மனதைக் குளிர்விக்கவே மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.
கமிஷனை அடிப்படையாகக் கொண்ட கேவலமான அரசியல் ஒழித்துக் கட்டப்பட்டால் தான் நாடு உருப்படும். உலகவர்த்தகமயமாக்கல் என்ற பெயரில் நாட்டின் அடிப்படை அமைப்புகளான கூட்டுறவு சங்கங்களை மத்திய, மாநில அரசுகள்ஒழித்துக் கட்டி வருகின்றன என்றார் மேதா பட்கர்.


