13 வயதில் துறவறம்.. பெற்றோர் கதறல்.. ஆள் வைத்து கடத்தல்
சேலம்:
தங்களது 13 வயது மகன் சாமியார் ஆகிவிட்டதை ஏற்க முடியாத பெற்றோர் அவரை மடத்தில் இருந்து கடத்திச் சென்றனர். ஆனால், துறவறம் பூண்டுவிட்ட இளம் சாமியார் பெற்றோருடன் வசிக்க முடியாது என்று கூறிவிட்டதால் விவகாரம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது.
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த பட்டாபி- சாவித்திரி தம்பதியின் மகன் பரணீதரன் எனும் பரணி. தற்போது 13 வயதாகும் இவரை 9 வயதில் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் படிப்பதற்காக பெற்றோர் சேர்த்துவிட்டனர்.
ஆனால், பரணீதரனோ துறவறம் பூண்டுவிட்டார். இவருக்கு ஸ்ரீஹர பரணீதர ராகவேந்திர சுவாமிகள் என பெயரும் சூட்டிவிட்டது ஆசிரமம். இதனால், தனது பெற்றோர் உள்பட அனைத்தையும் துறந்துவிட்ட பரணீதரன், ஆசிரமத்திலேயே வசிக்க ஆரம்பித்துவிட்டார்.
தங்களது மகன் தங்களையே துறந்துவிட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பரணீதரனை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
இந் நிலையில் பரணீதரனை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக சேலம் நகர காவல் நிலையத்தில் ஆசிரமத்தின் சார்பில் புகார் தரப்பட்டது.
இதையடுத்து சேலம் போலீஸார் தந்தை பட்டாபி, தாயார் சாவித்திரி ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம் சாமியார் பரணீதரனும் காவல் நிலையத்திற்கு வந்தார். காவி உடையில், மழிக்கப்பட்ட தலையுடன், தீர்க்கமான பார்வையுடன் வந்த அவரை போலீசார் மிகவும் கண்ணியமாக நடத்தினர்.
இன்ஸ்பெக்டருக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து மிக நிதானமாகப் பேசிய பரணீதரன், நான் துறவறம் பூண்டுவிட்டேன். இனி எனக்கு பெற்றோர், உற்றார், உறவினர் என்றெல்லாம் யாரும் கிடையாது. நான் வீட்டில் போய் வசிக்க முடியாது.
சன்யாசிகளுக்கு பந்தம் கிடையாது. வேண்டுமானால் என் பெற்றோர் சிஷ்யர்களாக மாறி என்னுடன் வந்து வசிக்கலாம். ஆனால், அப்போது என் சித்தாந்தத்தில் பெற்றோர் தலையிடக் கூடாது.
நான் உலகுக்கு செய்ய வேண்டிய வேலைகள் ஏரளமாய் உள்ளன. குடும்பம் என்ற சுழலுக்குள் சிக்க நான் விரும்பவில்லை. அவர்களுக்கு (பெற்றோருக்கு) கடன் இருப்பதாக சொல்கிறார்கள், அதை அடைக்க முயல்வேன் என்றார் இளம் சுவாமி.
ஆனால், தங்களது மகனை ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அவர் வேதம் பயில வேண்டும் என்பதற்காகத் தான் ஆசிரமத்துக்கு அனுப்பினோமே தவிர, அவரை சாமியாராக்க அல்ல, எனவே மகனை எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பரணீதரனின் பெற்றோர் வற்புறுத்தினர்.
ஆனால், அவர்களுடன் (பெற்றோருடன்) செல்ல எனக்கு விருப்பம் இல்லை என்று இளம் சாமியார் திட்டவட்டமாக கூறி விடவே, ரொம்பவே குழம்பிவிட்ட போலீசார் பெற்றோரை அமைதிப்படுத்திவிட்டு சாமியாரை பலத்த பாதுகாப்புடன் அவரது ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இப்போது ஆசிரமத்துக்குச் சொந்தமான ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பரணீதர சுவாமிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பட்டாபி-சாவித்திரி தம்பதியரிடம், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுமாறும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தங்களது மகனுக்காக கண்ணீர் விட்டபடி அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர்.
இச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் தன்னை பெற்றோர் ஆள் வைத்துக் கடத்தியதாகவும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும் பரணீதரன் சுவாமிகள் கூறுகிறார். இதனால் தனக்கு போலீசாரின் பாதுகாப்பு மிக அவசியம் என்று கூறும் இளம் சாமியார், தனக்கு இப்போது 5 சிஷ்யர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சுவாமியின் ஒரே சகோதரிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications