அமைச்சர்கள் செம்மலை, ஜீவானந்தம் நீக்கம்
சென்னை:
கல்வித்துறை அமைச்சர் செம்மலை, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஜீவானந்தம் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா இன்று பதவி நீக்கம் செய்தார்.
அதே போல சில அமைச்சர்களின் துறைகளையும் ஜெயலலிதா மாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா செய்துள்ள 16 வது அமைச்சரவை மாற்றம் இது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சி.வி. சண்முகத்திடம் கல்வி மற்றும் பிற்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அன்னாவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அன்னாவி கவனித்து வந்த வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டுரங்கனிடம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைச்சரவை மாற்றம் கொஞ்சம் தாமதமாக நடந்தேறியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பொது மக்களின் அதிருப்தி காரணமாக தொகுதிக்குள் நுழைய முடியாத நிலையில் இருந்த அமைச்சர்களில் டாப் லிஸ்டில் இருந்தவர்கள் நிதியமைச்சர் பொன்னையனும், செம்மலையும் தான்.
இதில் பொன்னையன் தப்பிவிட்டார். செம்மலை கழற்றிவிடப்பட்டுள்ளார்.
முன்பு நலத்துறை அமைச்சராக இருந்த செம்மலை , டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ததையடுத்து, ஜெயலலிதாவின் உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்தினார். அதன் மூலம் முதல்வருக்கு மிக நெருக்கமானவரானார்.
அடுத்து கல்விமைச்சரான பின்னரும் செல்வாக்கு குறையாமல் இருந்து வந்தார். ஆனால், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவது போன்ற விஷயங்களில் இவர் அதிகமாகவே கை நீட்டியதாக புகார்கள் வந்தன.
நேற்று, முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் செம்மலையும் அதிகாரிகளும் சந்தித்து துறை சார்பாக விவாதித்தாக தமிழக அரசின் செய்தித்துறை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு புகைப்படங்களை அனுப்பியது.
சிறிது நேரத்தில் பத்திரிக்கை ஆசிரியர்களை அவசரமாகத் தொடர்பு கொண்ட செய்தித்துறை அதிகாரிகள், அந்தப் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். அப்போதே செம்மலைக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதை நிருபர்கள் யூகித்தனர்.
ஜீவனந்தத்தின் பதவி நீக்கத்துக்கு அவர் தேர்தல் வேலைகளை சரிவர செய்யாதது காரணம் என்று கூறப்படுகிறது.
பலமுறை மாற்றி அமைக்கப்பட்டுவிட்ட தமிழக அமைச்சரவையை இனியும் மாற்றி அமைக்க அனுமதிக்க வேண்டாம் என ராஷ்ட்ரபதி பவனில் இருந்து ஆளுநர் ராம்மோகன் ராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவு வந்தது.
அடிக்கடி அமைச்சரவை மாற்றத்தால் தமிழகத்தில் ஜனநாயகம் கேலிக் கூத்தாவதாக ஜனாதிபதி கருதுவதாக ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அமைச்சரவையை மாற்ற ஆளுநரும் அனுமதி தராமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு என்ற விஷயம் ஏதும் இல்லாமல், அமைச்சர்கள் நீக்கம், பொறுப்புகள் மாற்றம் என்ற அளவோடு நிறுத்திக் கொண்டுவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி எதற்கும் அவசியம் ஏற்படவில்லை.
அதே நேரத்தில் சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்குக்கு மேல் அமைச்சர்கள் இருக்கக் கூடாது என்ற விதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் அதிகபட்சமாக 23 அமைச்சர்கள் தான் இருக்க முடியும். இப்போது இருவர் நீக்கப்பட்டுவிட்டதால் எண்ணிக்கை 25ல் இருந்து 23க்கு வந்துவிட்டது.
இதன்மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications