டெல்லி பயணம்: அய்யரால் தவிர்த்த ஜெ !
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று தொடங்கும் முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. அவருக்குப்பதிலாக அமைச்சர்கள் பொன்னையன், அன்பழகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை முதல்வர் புறக்கணித்ததற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி நிர்வாகம் குறித்த இந்த இரண்டு நாள் மாநாட்டில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கரஅய்யர் தான் முக்கிய உரையாற்றவுள்ளார். முதல்வர்களுடன் அவர் தான் முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளார்.
அய்யருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான மோதல் நாடறிந்தது. இதையடுத்து இக் கூட்டத்தை ஜெயலலிதாபுறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பாகவும், பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசின் நிதியை நேரடியாக வழங்குவது குறித்தும், உள்ளாட்சிஅமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க நிதியமைச்சர் பொன்னையனும், உள்ளாட்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அன்பழகனும் நேற்றேடெல்லி சென்றுவிட்டனர். முன்னதாக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இவர்களுடன் டெல்லி செல்வார்என்று கூறப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை.
பொன்னையன், அன்பழகனுடன் உள்ளாட்சித்துறைச் செயலாளர் சாந்தஷீலா நாயர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல்துறைச் செயலாளர் கரியாலி ஆகியோரும் உடன் சென்றனர்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த பின் நடக்கும் முதல் முதல்வர்கள் மாநாடு இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
வாசன் கண்டனம்:
டெல்லியில் இன்று தொடங்கிய முதல்வர்கள் மாநாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஜனநாயக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக, டெல்லியில் முதல்வர்கள்மாநாடு கூட்டப்பட்டள்ளது.
இதில் தான் கலந்து கொள்ளாமல் இரு அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா.
மாநாட்டைப் புறக்கணித்துள்ளதன் மூலம் தமிழக நலன்களுக்கு அவர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழக திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெறகிடைத்த வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா அலட்சியப்படுத்தியுள்ளது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications