படங்களுக்கு இனி தமிழ் பெயர் தான்..
சென்னை:
தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து, தமிழ் படங்களுக்கு இனிமேல் ஆங்கிலப் பெயர்வைக்க மாட்டோம் என உறுதியளித்தனர்.
தமிழ் திரையுலகம் சமீப காலமாக பாமக நிறுவனர் ராமதாஸிடம் சரண்டர் ஆகி வருகிறது. முதலில் ராமதாஸ்- ரஜினி மோதல் ஏற்பட்டது.பாபா பட வெளியீட்டின்போது பாமகவினரின் மிரட்டல் காரணமாக படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் அந்தப் படத்தை நிறுத்தின.
மறுத்த தியேட்டர்கள் தாக்கப்பட்டன. படத்தின் தோல்விக்கு இந்த கலாட்டாவும் ஒரு காரணமாக அமைந்தது.
ரஜினியைத் தொடர்ந்து விஜயகாந்த்- ராமதாஸ் மோதல் நடந்தது. இதனால் கஜேந்திரா பட ரிலீசே மாதக்கணக்கில் தள்ளிப் போனது.
விஜயகாந்த்தை வைத்து கஜேந்திரா படத்தைத் தயாரித்த தயாப்பாளர் வி.ஏ.துரை, ராமதாஸை சந்தித்து சமாதானம் பேசி படத்தை ரிலீஸ்செய்ய அனுமதி வாங்கினார்.
இப்போது மீண்டும் தமிழ் சினிமா ராமதாஸிடம் சரண்டர் ஆகியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.இந்த அமைப்பு தமிழ் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கக் கூடாது என்று போராடி வருகிறது.
இந்தப் போராட்டத்துக்காக சமீபத்தில் திருமாவளவனுடன், ஒரே மேடையில் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் ராமதாஸ்.
அப்போது, ஆங்கிலப் பெயர்களுடன் தமிழ் சினிமாக்கள் வெளி வந்தால் அதைத் திரையிட விடாமல் தடுப்போம் என ராமதாசும்திருமாவளவனும் கூட்டாக அறிவித்தனர்.
இந் நிலையில், இயக்குனர் சேரன் தலைமையில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பலர் ராமதாஸை சந்தித்தனர்.
அவரிடம், இனிமேல் தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட மாட்டாது என்று திரையுலகப் புள்ளிகள் உறுதியளித்தனர்.
சேரன் கூறுகையில், நான் எடுத்து வரும் டூரிங் டாக்கீஸ் படத்தின் பெயரையும் தமிழில் மாற்ற உள்ளேன். ராமதாஸ், திருமாவளவனின்கோரிக்கையில் உள்ள நியாயம் கருதியே இதைச் செய்கிறோம் என்றார்.
இதையடுத்து சேரனுக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் ராமதாஸ் பேசுகையில், ஆங்கிலத்தில் பெயர்களை வைத்தால் அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம். மேலும் திருட்டுவிசிடிக்கு எதிரான திரையுலகினரின் போராட்டத்துக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு தரும் என்றார்.
ராமதாஸ் பேட்டி:
சென்னையில் நிருபர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,
கொங்கு வளர்ச்சி தமிழ் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு தமிழ்ப் பண்பாட்டின் பன்முகத்தை பிரதிபலிக்கும் வகையில் சென்னை,மதுரை, திருச்சி, கோவை, கடலூர், காஞ்சிபுரத்தில் தமிழிசை விழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் நடக்கும் தமிழிசை விழாவுக்கு முடிந்தால் பிரதமரையும் அழைத்து வருவோம். சங்கத் தமிழ்ப் பாடல்கள், திருக்குறள்,குறவஞ்சி, கும்மிப்பாட்டு, பிள்ளைத் தமிழ், காவடிச் சிந்து, பாரதியார், பாரதிதாசனார் ஆகியோரின் பாடல்கள், நாட்டுப்புற இசைஆகியவை இடம் பெறும்.
அதே போல இஸ்லாமிய, கிருஸ்துவ இசை தமிழ்ப் பாடல்களும் இடம் பெறும். கருத்தரங்குகள், இசையரங்குகள் நடக்கும்.
இப்போதையே சினிமா இசையால் வக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்ட தமிழ் நெஞ்சங்களை பண்படுத்தி தமிழ் ஒளி பாய்ச்சும் இந்தத்கருத்தரங்குகள் அடுத்த ஆண்டு வெளிநாடுகளிலும் நடக்கும்.
தமிழகத்தில் தமிழ் தவிர மாற்று மொழிகளில் உள்ள விளம்பரப் பலகைகள் தார் பூசி அழிக்கப்படும். அதே போல கோவில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்யக் கூடாது என்ற போராட்டமும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும்.
இதற்கு அடையாளமாக ஒரு கோவிலைத் தேர்வு செய்து அதன் ஓரமாக நவம்பர் 8ம் தேதி அறவழிப் போராட்டம் நடத்துவோம்.
தமிழைப் பயிற்சி மொழிக்கவும், நீதிமன்றங்களில் தமிழ் மூலம் வழக்குகளை நடத்தவும் போராட்டங்கள் நடக்கும்.
சின்னத் திரை, வெள்ளித் திரைகளில் தமிழைக் கொச்சைப்படுத்துவதை நிறுத்தக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் முன் டிசம்பர் 20ம் தேதிபோராட்டம் நடக்கும். சென்சார் போர்ட்டை முதலில் சரி செய்ய வேண்டும் என்று கோரி டிசம்பர் 27ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
தமிழை ஒழிக்க வேண்டும் என்று மறைமுகமாக முயல்பவர் முதல்வர் ஜெயலலிதா. அவரை ஆட்சியை விட்டு விரட்டும் வரை ஓயமாட்டோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications