வட சென்னை அனல்மின் நிலையத்தில் தீ விபத்து
பொன்னேரி:
சென்னையை அடுத்து உள்ள அத்திப்பட்டி அனல்மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்சேதமடைந்தன.
அத்திப்பட்டியில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 860 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந் நிலையில் கீழ்தளத்தில் உள்ள யூனிட்டில் மின்கசிவு காரணமாக தீப் பிடித்துக் கொண்டது. கேபிள் வழியாக இத் தீ மளமளனெ பரவியது.
அனல்மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டும், தீயைக் கட்டுக்குள்கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து சென்னை சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 10 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இறுதியில் 3 மணி நேரபோராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தின்போது, 5-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த 5 ஊழியர்கள் புகையில் சிக்கி உயிருக்கு போராடினர். தீயணைப்புவீரர்கள் ராட்சத ஏணி மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications