நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மட்டும் 2,000 பேர் பலி
நாகப்பட்டிணம் - கடலூர்:
தமிழகத்தில் நாகப்பட்டிணம் மாவட்டம் தான் கடல் கொந்தளிப்பால் மிக பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார். 2,000 பேர்வரை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
அதே போல அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
கடல் கொந்தளிப்பால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர நகரங்கள் சீர்குலைந்துள்ளன. சென்னையில் அரசு ராயாப்பேட்டைமருத்துவமனையில் தொடர்ந்து பிணங்களாக வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
நாகப்பட்டணம் மாவட்டத்திலும் ஏராளமான பிணங்கள் தொடர்ந்து மீட்கப்பட்ட வருகின்றன. இதுவரை 1,500 சடலங்கள்மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தரங்கம்பாடி மூழ்கியது:
நாகப்பட்டிணம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதியான த்தில் தரங்கம்பாடியின் பெரும் பகுதி நீரில் மூழ்கிவிட்டது.கீச்சாங்குப்பம், தரங்கம்பேட்டை ஆகிய கிராமங்கள் கடல் நீரில் மூழ்கியுள்ளன.
மீனவர்கள் அதிகம் வசிக்கும் இப் பகுதிகளில் காலை 9.30 மணியளவில் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சுமார் 2 கிலோமீட்டர்தொலைவுக்கும் மேல் நீர் உள்ளே புகுந்தது. இப் பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது. இங்குள்ள குடிசைகள் அனைத்தும் நீரில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.
ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இங்கு 1,500 பேர் வரை பலியாகியிருக்கலாம்என்று அஞ்சப்படுகிறது.
காஞ்சி. சர்ச் இடிந்து 42 பேர் பலி:
காஞ்சிபுரம் அருகே புதுப்பட்டனம் என்ற இடத்தில் நில அதிர்ச்சி மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக தேவாலயம் இடிந்து விழுந்தது.இதில் சர்ச்சிற்குள் இருந்த 42 பேர் பரிதாபமாகப் பலியாயினர்.
புதுவை மற்றும் காரைக்கால் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.
கடலூரின் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் 190க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 5,000மீனவர்களைக் காணவில்லை.
சோதிகுப்பம், சோணான்குப்பம், தேவானம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த ஊர்களில் சுமார் 10,000வீடுகள் கடலில் மூழ்கிவிட்டன.
வேளாங்கண்ணியில்..
அதே போல பிரசித்தி பெற்ற மாதா கோவில் உள்ள வேளாங்கண்ணியிலும் கடல் நீர் புகுந்துள்ளது. மாதா கோவிலுக்குள்ளும் நீர்புகுந்துவிட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் கடலுக்கு வெகு அருகில் உள்ள பகுதியாகும். இங்கு ஏராளமான மீனவர் குடியிருப்புகளும், அரசு ஊழியர்கள்குடியிருப்புகளும் உள்ளன. மேலும், சென்னை நகரின் முக்கிய ஆறான அடையாறு கடலில் கலக்கும் இடம் இதுவாகும்.
இதன் காரணமாக ராட்சத அலைகள் எழுந்ததால் கடல் நீர் அடையாறு ஆற்றின் வழியாக சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்டபகுதிகளுக்குள் எளிதாக ஊடுறுவிவிட்டது.
சென்னை பட்டிணப்பாக்கத்தில்...
மேலும், பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் மிகவும் பழமையானவை என்பதால் பல வீடுகள் தாறுமாறாக இடிந்துகிடக்கின்றன. இப்பகுதியின் சந்து பொந்துகளில் எல்லாம கடல் நீர் புகுந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
இதேபோல கடலூர் கடலோரப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேகமான கடல் அலைகளின் எழுச்சியால் ஏராளமானவிசைப் படகுகள் தூக்கி வீசப்பட்டு கரையைத் தாண்டி வந்து விழுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. கடலூரில் மட்டும் குறைந்தது 190 பேர்இறந்தனர்.
கடல் நீரில் பல சடலங்கள் மிதந்து வருகின்றன. கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த 5000க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவிலலை.
கல்பாக்கத்தில் 20 பேர் பலி:
சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் பகுதியிலும் 20 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் தமிழக கடலோரப் பகுதி நகரங்கள் அனைத்தும் கடல் கொந்தளிப்பினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதே போல வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வேதாரண்யத்தில் பலபகுதிகள் ராட்சச அலையால் சேதமடைந்துள்ளன.
வேதாரண்யத்தின் ஆறுகாட்டுத்துறை என்ற பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து அப் பகுதியினர் மரப் பாலத்தின் வழியாக ஊரைவிட்டு வெளியேறினர். அப்போது பாலம் உடைந்து நீரில் விழுந்தது. இதில் வேதநாயகி என்ற 55 வயது பெண் பலியானார்.
சாந்தோம் கலங்கரை விளக்கம் சேதம்:
சாந்தோம் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கலங்கை விளக்கம் இடிந்து விழும்வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெரீனா கடற்கரைப் பகுதியில் கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications