மதுரையை அலற வைத்த சூறாவளி: 3 பேர் பலி
மதுரை:
மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பயங்கர சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில்மரங்கள், மின் கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன. இடி தாக்கியதில் 3 பேர் பலியாயினர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் சூறாவளியுடன் பயங்கர மழைபெய்தது. அதில் மதுரையில் தான் மிக பலத்த மழை பெய்தது.
இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த இந்த பயங்கர மழையால் நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலபகுதிகளிலும் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டது.
யானைக்கல் பகுதியில் பஸ் மீது மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். பெரியார் பேருந்துநிலையம் முழுவதும் கடல் நீர் போல மழை நீர் தேங்கியது.
சித்திரைப் பொருட்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பல அரங்குகள் சூறாவளிக் காற்றில் தூக்கி எறியப்பட்டன. இதனால்பொருட்காட்சிக்கு வந்தவர்கள் அலறி ஓடினர். இதையடுத்து பொருட்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரம் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருளாயி என்ற பெண் இடி தாக்கி இறந்தார். மேலூர் அருகே கீழப்பட்டி என்றகிராமத்தில், பாண்டி என்ற கூலித் தொழிலாளி மின்னல் தாக்கி இறந்தார். கொட்டாம்பட்டி அருகே ஜவத்தான் பட்டி கிராமத்தில் வாலி என்றபெண் சத்துணவு அமைப்பாளர் மின்னல் தாக்கி இறந்தார்.
மதுரை தவிர தேனி, பெரியகுளம், கம்பம், தேவதானப்பட்டி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை, இடி மின்னலுக்கு மாநிலம் முழுவதும் 5க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.












Click it and Unblock the Notifications