கூட்டுப்பட்டாவிலிருந்து தனி பட்டா பெறுவது எப்படி? கூட்டு பட்டாவில் பெயர் நீக்குவது எப்படி?
சென்னை: சொத்து என்று வந்துவிட்டாலே அதில் பட்டா என்பது மிக முக்கியமான ஆவணம். ஆனால், சிலருக்கு கூட்டுப்பட்டா மற்றும் தனிப்பட்டா என்றால் என்ன, அவைகளுக்குள் வித்தியாசம் என்ன, அவைகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன, கூட்டுப்பட்டா, தனிப்பட்டாவில் பெயர் சேர்ப்பது அல்லது நீக்குவது எப்படி என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த நிலத்திற்கான ஆவணத்தில் அவர்கள் அனைவரின் பெயரும் மொத்தமாக இடம் பெற்றிருக்கும். இதற்குத்தான் கூட்டுப்பட்டா என்பார்கள்.. இதில், அந்த நிலத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது துல்லியமாக தெரிந்திருக்காது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே அந்த நிலத்திற்கு உரிமையாளர் என்றால், அவருக்கு வழங்கப்படும் பட்டாவிற்கு தனிப்பட்டா என்று பெயர்.. இதில் அந்த நபரின் பெயர், சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் போன்ற அனைத்துமே தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டா பெறுவது எப்படி
கூட்டுப்பட்டாவில் இருக்கும் உங்கள் நிலத்தை பிரித்து தனிப்பட்டா பெற, அந்த நிலத்தின் மற்ற உரிமையாளர்களின் சம்மதம் ரொம்பவே அவசியம். வாரிசு சொத்தாக இருந்தால், வாரிசு சான்றிதழ் அல்லது சொத்துப் பங்கீட்டு ஆவணம் தேவை.
முதலில், உங்கள் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு "பட்டா பிரிப்பு" செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் பழைய பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் பங்கீட்டுப் பத்திரத்தை இணைக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையாளர் நிலத்தை நேரில் அளந்து, எந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்வார்கள்.
தாசில்தார் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததும், கூட்டுப்பட்டா ரத்து செய்யப்பட்டு உங்களுக்கெனத் தனிப்பட்டா வழங்கப்படும். அனைவரும் ஒத்துழைத்தால் இந்த வேலை மிக எளிதாக முடியும். ஒருவேளை மற்ற உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லையானால், நீங்கள் கோர்ட் மூலம்தான் தீர்வு காண வேண்டியிருக்கும்.
தேவையான ஆவணங்கள்?
தனிப்பட்டாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், கூட்டுப்பட்டாவின் நகல், விற்பனைப் பத்திரம், பகிர்வு ஒப்பந்தம், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்றும் அடையாள அட்டைகளான வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பிற அரசு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று உறுதி செய்த பிறகு, பொதுவாக 30 முதல் 60 நாட்களுக்குள் தனிப்பட்டா உங்கள் கைக்கு வந்துவிடும்.
பெயர் சேர்க்கணுமா? நீக்கணுமா?
கூட்டுப்பட்டாவில் புதிதாக ஒருவரது பெயரை சேர்க்க விரும்பினால், விற்பனைப் பத்திரம், பரிசுப் பத்திரம் அல்லது வாரிசுச் சான்று போன்றவற்றை கொண்டு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வட்டாட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு.
அதேபோலவே, கூட்டுப்பட்டாவிலிருந்து ஒருவரது பெயரை நீக்க வேண்டுமானால், அந்த நபர் தனது உரிமையை விட்டுக்கொடுக்கும் "விடுவிப்பு பத்திரம்" (Release Deed) கண்டிப்பாக இருக்க வேண்டும். அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெயரை நீக்க முடியும்.
பட்டா தொடர்பான ஆவணங்களைச் சரியாக வைத்திருப்பது, பிற்காலத்தில் சொத்து சம்பந்தமான சிக்கல்களைத் தவிர்க்க உதவும். எனவே, உங்கள் நில ஆவணங்களை அவ்வப்போது சரிபார்த்து முறையாகப் பராமரிப்பது நல்லது...!!!














Click it and Unblock the Notifications