கரூரில் 3,084 ஏக்கர் நிலங்கள் பட்டா மாற்றம்.. தவெக அரசின் முடிவுக்கு அண்ணாமலை வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம். தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டிருந்த பதிவில், "தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Transfer of Patta for 3 084 acres of land in Karur Annamalai welcomes TVK government s decision

குறிப்பாக, ஜூலை 9ஆம் தேதியன்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார்.

ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? திருக்கோவில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்? ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் ரமேஷ்.

. முந்தைய திமுக ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை, ஆன்மீகப் போர்வையில் வந்துள்ள திரு. ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் விஜய் அவர்கள் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், 1963-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறு இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி, பல தலைமுறைகளாக விவசாயம் செய்யும் பொதுமக்களுக்கு நில உரிமை உறுதி செய்யப்பட்டு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டது.

எனவே இனாம் நிலங்கள் அனைத்தும் கோயில்களுக்குச் சொந்தமானவை அல்ல. பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டாக்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதில் எவ்வித கோயில் நிலங்களும் யாருக்கும் தாரைவார்க்கப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தினார். ஆனாலும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. தொடந்து விமர்சினங்களை இந்து சமய ஆர்வலர்கள் வைத்து வருகிறார்கள்.

இந்த சூழலில் வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம், இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.

எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை." இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+