"CBI விசாரணையில் இருக்கும் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றம்" - அப்பாவு
சென்னை: "சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தெரியாதா?" என சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று பேசியது தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. "நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை கூட்டம் அதிகமாக இருப்பதாக எங்களை எச்சரிக்காதது ஏன்? கரூரில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா?" எனப் பேசினார் விஜய்.

மேலும், "ஏன் என்னை காவல்துறையே நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் அப்போது நம்பிவிட்டேன்" என்றும் பேசினார் விஜய். முதல்வர் விஜய், காவல்துறை மீது குற்றம்சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா எங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்? இது பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா?
41 பேர் கொலைக்கு காரணம் காவல்துறைதான் என்ற அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகா? இதனை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்கு சென்றபோது மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்தீர்களா?
தமிழக முதல்வர் அரசு தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா?
சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன் உங்கள் சட்டப்பேரவை வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை கட்சி நிதி பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், தவெக கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா ? இது கட்சி நிதி இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.













Click it and Unblock the Notifications