விஜய்க்கு பெரிய சிக்கல்! தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி ஆதாயம்? காலை சுற்றும் வழக்கு
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி ஜோசப் விஜய் ஆதாயமடைந்ததாக, அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் எதிர்மனுதாரரான தேர்தல் ஆணையம் தமது பிராமணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பெரம்பூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் தாக்கல் செய்த மனுவில், "பெற்றோரையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் தவெகவுக்கு ஓட்டு போட ஒவ்வொரு குழந்தைகளும் வலியுறுத்த வேண்டும் என பிரச்சாரத்தின் போது விஜய் பேசியுள்ளார். தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக குழந்தைகளை உணர்வுரீதியாக தவெகவுக்கு ஆதரவு தர அவர் தூண்டியுள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில், ஜோசப் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த நான்கு வழக்குகளும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்குகளும், அவர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்குகள் 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பெரம்பூர், திருச்சி கிழக்கு, வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் பிராமணப் பத்திரம்
தாக்கல் செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் எந்த வடிவத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை 05-02-2024 தேதியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
எனவே, இந்த வழக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நெருக்கடியாக மாறலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, "என்னோட குட்டி நண்பா நண்பீசுக்கு ஒரு வேண்டுகோள்.. இந்த விஜய் மாமாவுக்காக.. விஜய் மாமா ஜெயிக்கணுங்கறதுக்காக.. உங்க வீட்டில் உள்ள எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வைங்க.. விசிலுக்கு ஓட்டு போடற வரை விடாதீங்க" என குழந்தைகளிடம் விஜய் வேண்டுகோள் வைத்திருந்தார்.
தேர்தல் பிரச்சாரங்களில் எந்த வடிவத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், வெளிப்படையாக குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்து வாக்கு சேகரித்த விஜய் பெற்ற வெற்றிக்கு நீதிமன்றத்தின் மூலமாக சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications