மதுரவாயலில் வேலைக்கே போகாத இளைஞர்கள்.. மாற்றி யோசித்து 2 கோடி சம்பாத்தியம்.. வரவேற்ற புழல் சிறை
சென்னை: சென்னையில் உள்ள அதிக சம்பளத்துடன் பிரபல ஐடி நிறுவனங்களில் வேலை தேடி வந்த இளைஞர்கள் நினைத்தே பார்க்க முடியாத விஷயம் நடந்திருக்கிறது. சென்னை பெருங்குடியைச் சேர்ந்த இளைஞர் பிரதீப் ராஜா என்பவர் அளித்த புகாரால் பெரிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐடி நிறுவனங்களில் அதிக சம்பளத்திற்கு வேலைக்கு சேர ஆசைப்பட்ட இளைஞர்களிடம் நைசாக பேசி கோடிகளில் சம்பாதித்துள்ளார்கள் இரண்டு பேர்.. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் பலருக்கும் அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்பது தான் கனவாக உள்ளது.ஆனால் அவர்களின் கனவை காசாக்கி சம்பாதித்துள்ளார்கள் இரண்டு பேர். நல்ல சம்பளத்தில் பெரிய நிறுவனங்களில் உங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றுஆசை வார்த்தை கூறியுள்ளனர். அரசுவேலையில் சேர ஆசைப்படுபவர்களை எப்படி ஏமாற்றுவார்களோ அதே பாணியில் ஏமாற்றி நம்ப வைத்து 2 கோடி சம்பாதித்து இருக்கிறார்களாம். இந்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த 27 வயதாகும் பிரதீப் ராஜா என்பவத்ர எம்.எஸ்.சி. முடிந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறுகையில், "நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கு குறைவான சம்பளமே கிடைத்தது. எனவே அதிக சம்பளத்துடன் பிரபல நிறுவனங்களில் வேலை தேடிக்கொண்டிருந்தேன். இந்த நிலையில், சென்னை மதுரவாயலில் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனம், பிரபல ஐ.டி. நிறுவனங்களில் மதிப்பூதிய சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் அறிவிப்பை உண்மை என்று நம்பி, நான் பிரபல நிறுவனத்தில் வேலைக்காக ரூ.2.70 லட்சம் கொடுத்து எனது பெயரை பதிவு செய்தேன்.
இதேபோல், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பிரபலமான ஐ.டி. நிறுவனங்களில் வேலை கேட்டு, மதுரவாயல் நிறுவனத்தில் தங்களது பெயரை பதிவு செய்தனர். வேலைக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு வாலிபரும் ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கொடுத்தார்கள். ஆனால், குறிப்பிட்ட அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தினர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.. ரூ.2 கோடிக்கும் மேல் பணத்தை சுருட்டிக்கொண்டு, நிறுவனத்தையும் மூடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, ஏமாந்த பணத்தை வசூலித்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதேபோல், வேலை கிடைக்காமல் ஏமாந்த மேலும் 100 இளைஞர்களும் புகார் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். குறிப்பிட்ட மோசடி வேலைவாய்ப்பு நிறுவனத்தை திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சிவப்பிரசன் (35) என்பவரும், மதுரவாயலைச் சேர்ந்த பிரபு (41) என்பவரும் நடத்தி வந்தனர். இவர்கள் இருவரும் பட்டதாரிகள். நண்பர்களான இவர்கள், வேலையில்லாமல் சுற்றித்திரிந்துள்ளார்கள். பின்னர் இந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கி, அப்பாவி பட்டதாரி வாலிபர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியது விசாரணையில் தெரியவந்தது.
சிவப்பிரசன், பிரபு ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளது. வேலை இல்லாத இளைஞர்கள், அதிக சம்பளத்தில் வேலை செய்யலாம் என்று ஆசைப்பட்ட இளைஞர்களை ஏமாற்றி 2 கோடி சம்பாதித்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications