முதல்வரான பிறகு முதல் முறையாக நாளை பெரம்பூர் செல்லும் விஜய்.. பட்டா, ரேஷன் கார்டுகள் வழங்குகிறார்!
சென்னை: தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக நாளை (ஜூலை 13) தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்குச் செல்ல இருக்கிறார். அங்கு பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, தொகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்து, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம்
சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் முதலாவது தெருவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டடம் ஒன்று, தற்போதைய நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு புதிய எம்.எல்.ஏ அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தின் முன் பகுதியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச.ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்க்காக தனியாக ஒரு பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தைச் சுற்றி சிசிடிவி பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கைகளைத் தினசரி கேட்டு நடவடிக்கை எடுப்பதற்காக 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கணினி வசதிகளுடன் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
வண்ண ஓவியங்கள்
அலுவலகத்தின் எதிரே உள்ள சுற்றுச்சுவர்களில், தவெக அரசின் முக்கியத் திட்டங்களான 'சிங்கப்பெண் திட்டம்', 'பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்' உள்ளிட்ட சாதனைகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மக்கள் சேவை தளம்
தொகுதி மக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் எந்நேரமும் நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், 'மக்கள் சேவை தளம்' என்ற புதிய மொபைல் செயலி (Mobile App) நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களின் புகாரைப் பதிவு செய்த சில நொடிகளிலேயே, அது பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் உள்ள நவீனக் கட்டுப்பாட்டு அறையைச் சென்றடையும். புகார் பெறப்பட்டவுடன், விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் உறுதிப்படுத்தல் அனுப்பப்படும். பொதுமக்கள் தங்களின் மனு எந்த நிலையில் உள்ளது என்பதை இந்தச் செயலி மூலமாகவே தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளலாம்.
3 நாட்களுக்குள் நடவடிக்கை
இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், மின்சாரம், சாலை வசதி, துப்புரவு போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அது குறித்த விவரம் செயலி வழியாகவே மக்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நலத்திட்ட உதவிகள்
நாளை பிற்பகல் 3 மணியளவில் அலுவலகத்தைத் திறந்து வைத்த பிறகு, முதலமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேஷன் சென்று ஆய்வு நடத்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் வீட்டு மனைப் பட்டாக்களை அவர் நேரடியாக வழங்குகிறார்.
முதலமைச்சர் விஜய் வருகையையொட்டி த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர். அவர் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறை தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications