ஆடிய ஆட்டம் என்ன !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

7 கட்சிக் கூட்டணி என்ற பெயரில் திமுக கூட்டணியினர் ஆடிய ஆட்டம் தான் என்ன, அடித்த கொட்டம் தான் என்ன. ஆனால்இவற்றையெல்லாம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டார்கள் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இடைத் தேர்தல் முடிவு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

காஞ்சிபுரம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாரி வழங்கியிருக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கை 87,274.திமுக பெற்றிருக்கிற வாக்குகள் 69,626. வாககு வித்தியாசம் 17,648. கும்மிடிப்பூண்டியில் அதிமுகவுக்கு மக்கள் அளித்துள்ளவாக்குகள் 83,716. திமுக வாக்குகள் 56,554. வித்தியாசம் 27,162.

இடைத் தேர்தல்களைப் பொருத்தவரை களத்தில் நின்றது திமுக, அதிமுக இரண்டு கட்சிகள்தான் என்று கூறப்படுகிறது. ஆனால்உண்மையில் அதிமுகவுக்கு எதிராக களத்தில் நின்றது திமுக என்ற ஒரு கட்சி மட்டும் அல்ல, திமுக தலைமையிலான 7 கட்சிகளும்அதிமுக என்ற ஒற்றைக் கட்சிக்கு எதிராக நின்றன.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக ஈட்டியுள்ள வெற்றி, ஈடு இணையற்ற வெற்றி. அதே சமயத்தில் எந்தக் கட்சியின்துணையோடும் இந்த வெற்றி அமையவில்லை.

அதிமுகவுக்கு பக்க பலமாக இருந்தது மக்கள் துணை ஒன்றுதான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எப்போதும்எண்ணிச் செயல்படும் அதிமுகவுக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றி இது.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பதால் மக்களின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாகவே நான் நினைக்கிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எல்லாத் தரப்பு மக்களையும் மகிழ்விக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்நான் எடுத்துள்ள பல்வேறு முயற்சிகள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதற்கும், அவர்களது ஆதரவை அதிமுகஅமோகமாகப் பெற்றிருக்கிறது என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிவுகளே ஆதாரம் ஆகும்.

இந்த தேர்தல் முடிவுகள், 7 கட்சிகளின் இறுமாப்பிற்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி ஆகும். எண்ணிக்கையே பெரிது என்றுஇறுமாந்திருந்த 7 கட்சிகள் மக்களை மறந்து, மக்கள் நலனைக் காற்றில்பறக்க விட்டு மமதையோடு திரிந்தார்கள்.

நாங்கள் 7 கட்சிகளும் இணைந்து ஒன்றாய் இருக்கையில் எங்களை எதிர்த்து எவர் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புஒவ்வொரு நாளும் அவர்களுடைய சொல்லிலும், செயலிலும் எதிரொலித்தது.

அந்த அகந்தையுடன் அவர்கள் ஆடிய ஆட்டங்கள்தான் என்ன!. அடித்த கொட்டங்கள்தான் என்ன!. இவற்றை எல்லாம் மக்கள்மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 14.5.2005 அன்று மக்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தினார்கள். தர்மம் தனதுமெளனத்தை முறித்தபோது, தலை கால் தெரியாமல் ஆட்டமிட்டவர்கள் சத்திய வெள்ளத்தில் அடியோடு அடித்துச்செல்லப்பட்டு விட்டார்கள்.

ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்களே என்பதை மமதையாளர்கள் மறந்தார்கள். ஆனால் நாம் மறக்கவில்லை. நாம்இருப்பதே மக்களுக்காகத்தான் என்ற உணர்வே அதிமுகவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் உள்ளத்திலும், ஊடுறுவி நிற்கும்உணர்வாகும். இந்த உணர்விற்கு மக்கள் சூட்டிய மணிமகுடம்தான் இந்த வெற்றி.

எவரோடு எல்லாம் நாம் சேந்திருக்கிறோம் என்று எண்ணி இறுமாந்து அந்தக் கூட்டணிப் பெருமையிலே குதூகலித்துக்கொண்டிருந்தார்கள் 7 கட்சிக்காரர்கள். காஞ்சிபுரத்திலும், கும்மிடிப்பூண்டியிலும் வீசிய ஜனநாயகச் சூறாவளியில் அந்தசந்தர்ப்பவாதிகள் சருகுகளாகப் பறந்து போய் விட்டார்கள்.

நாம், கட்சிக் கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களோடு கூட்டணி வைத்துக் கொண்டோம். 7 கட்சிக் கூட்டணிபெரியதா, மக்கள் கூட்டணி பெரியதா? மக்கள் கூட்டணி தானே பெரிது. அந்த மக்கள் கூட்டணிதான் இன்றைக்கு வெற்றிபெற்றிருக்கிறது என்பதற்கு மக்கள் பெருவாயாக அளித்துள்ள வாக்குகளே பெரும் சான்று ஆகும்.

உண்மை, தனக்கு பக்க பலமாக மக்களை மட்டுமே நம்பியது. பொய், தனக்கு பக்கபலமாக மேலும் பல பொய்களை நம்பியது.பொய்யும், பொய்யும் சேர்ந்து பொய்யாட்டம் ஆடியதால் வெற்றி என்பதும் அவற்றுக்குப் பொய்யாகி போய் விட்டது. இதுதான்உண்மை.

இந்த வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களுக்கு மற்றும் ஒரு முறை என் மனதில் பூக்கும் நன்றி மலர்களைகாணிக்கை ஆக்குகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+