என்ஜிஓ சங்க தலைவர் சூரியமூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
கடலூர்:
தமிழ்நாடு என்ஜிஓ ஊழியர் சங்க தலைவர் சூரியமூர்த்தியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கடந்த வருடம் தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.
இந் நிலையில் கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சூரியமூர்த்தி மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார் கூறியது. அவர் வீடு கட்டும் பொது ஊழியர் சங்க தலைவராக இருந்த போது இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்தது.
இந் நிலையில் இன்று காலைகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாச்சி கிராமத்திலுள்ள சூரியமூர்த்தியின் வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி விஸ்வநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜ் தலைமையில் பொதுப்பணித்துறை ஊழியர்களும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில் இது வழக்கமான சோதனை தான் என்றனர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்று கேட்டதற்கு அது பற்றி பதில் கூற மறுத்து விட்டனர்.
இது பற்றி சூரியமூர்த்தி கூறுகையில், என் மீது எந்த வித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அதை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications