66 நாட்களாக நிரம்பி ததும்பும் மேட்டூர் அணை!
மேட்டூர்:
மேட்டூர் அணை 41 ஆண்டுகளுக்குப் பிறகு 66 நாட்களாக தொடர்ந்து தனது முழுக் கொள்ளளவில் இருந்து வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்ற மேட்டூர் அணைக்கு வயது 71.தமிழகத்தின் மிகப் பெரிய மற்றும் முக்கிய அணையாக மேட்டூர் அணை உள்ளது.மேட்டூர் அணையில் மொத்தம் 125 அடி நீர் வரை சேமிக்கலாம். இருப்பினும் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமேபெரும்பாலும் நீர் தேக்கி வைக்கப்படும்.
மேட்டூர் அணையில் கடந்த 1956ம் ஆண்டு முழுக் கொள்ளளவான 120 அடி நீர் கிட்டத்தட்ட 72 நாட்கள் வரை இருந்தது.இதற்குப் பிறகு 1964ம் ஆண்டு 79 நாட்களும், 1981ம் ஆண்டு 65 நாட்களுக்கு முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணைஇருந்தது.
அதன் பிறகு கடந்த ஐந்து வருடங்களாக மேட்டூர் அணை போதிய நீர் வரத்தின்றி நிரம்பவில்லை.
இந் நிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து அதிக அளவில் நீர் வரத்து இருந்ததாலும், மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்பெரிய அளவில் மழை பெய்து வந்ததாலும், ஒரே ஆண்டில் இதுவரை 4 முறை மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவைஎட்டியது.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இது 10 நாட்களுக்கு நீடித்தது. பின்னர் செப்டம்பர் 16ம்தேதி இரண்டாவது முறையும், அக்டோபர் 18ம் தேதி மூன்றாவது முறையும் அணை நிரம்பியது.
அதன் பிறகு அணையின் நீர் வரத்து குறைவதும், ஏறுவதுமாக இருந்து வந்தது. 4வது முறையாக கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதிதனது முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை. அன்று முதல் இன்று வரை கடந்த 66 நாட்களாக மேட்டூர் அணை தனதுமுழுக் கொள்ளளவிலேயே இருந்து வருகிறது.
முழுக் கொள்ளளவில் நீண்ட நாட்களாக அணை இருந்து வருவதால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருப்பினும் தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் பாசனப் பகுதியில் ஏராளமான பயிர்கள் சேதமடைந்துள்ளதால், போதியதண்ணீர் இருந்தும் அதை முழுமையாக கொண்டாட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications