கருணாநிதிக்கு சிபிசிஐடிசம்மன்: விசாரிக்க வருகிறார் பிரேம்குமார்
சென்னை:
கரூர் அமராவதி ஆற்றுப் பால வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு சிபிசிஐடிபோலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சங்கரராமன் வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்த எஸ்.பி. பிரேம்குமாரே, கருணாநிதியிடமும் விசாரணை நடத்தவுள்ளார்.
கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் இடிந்தது தொடர்பாக கருணாநிதி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, முன்னாள் தலைமைச்செயலாளர் நம்பியார், முன்னாள் உள்ளாட்சித்துறைச் செயலாளர் மாலதி, பாலத்தைக் கட்டிய இசிசிஐ நிறுவன நிர்வாக இயக்குனர்அப்துல் ரகுமான் ஆகிய 5 பேர் மீது முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்சிபிசிஐடி வழக்கு தொடர்ந்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1), தண்டனைச் சட்டம் 120 (பி), 408, 409 ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கருணாநிதி உள்ளிட்டவர்களை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
கருணாநிதியை விசாரிக்கும் பொறுப்பு, சிபிசிஐடி தென் மண்டல எஸ்பியான சங்கரராமன் புகழ் பிரேம்குமாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் ஒரு தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உதவி கமிஷ்னர்அம்பிகாபதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து திருச்சியிலிருந்து சென்னை வந்த சிபிசிஐடி குழுவினர், இன்று பிரேம்குமாருடன் கரூர் பால விவகாரம் தொடர்பாகஆலோசனை நடத்தினர். கருணாநிதியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து அவர்கள்முடிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கருணாநிதியை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்ப சிபிசிஐடி தனிப்படை முடிவு செய்தது.இதையடுத்து இன்று காலை இரு போலீசார் அறிவாலயத்துக்குச் செல்ல இருந்தனர். ஆனால், அவர்களை முரசொலிஅலுவலகத்துக்கு வருமாறு திமுக தரப்பு கூறியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் இரு போலீசார் முரசொலி அலுவலகம் சென்று சம்மனை கருணாநிதியிடம் வழங்கினர்.
அந்த சம்மனில் இரண்டு நாட்களுக்குள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கருணாநிதிக்கு சிபிசிஐடிஉத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்தனிப்பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்தே கருணாநிதி, கோ.சி.மணி ஆகியோரிடம் தனிப்படை போலீசார்விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
விசாரணையைத் தொடர்ந்து கருணாநிதியைக் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணைஅதிகாரியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்தபோது ஆந்திராவுக்குப் போய் ஜெயேந்திரர், விஜயேந்திரரை அள்ளிக் கொண்டு வந்தவர்பிரேம்குமார். அப்புவை விரட்டி விரட்டி சரணடைய வைத்தது, ரவிசுப்பிரமணியத்தை அப்ரூவர் ஆக்கியது என பல சாதனைகள்இவரது பட்டியலில் அடக்கம்.
ஆனால், இவரது விசாரணைகள் மிகக் கடுமையாக இருந்ததாக காஞ்சி மடத்தின் தரப்பில் புகார் கூறப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிரேம்குமாரிடம் ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்குஒப்படைக்கப்பட்டது. அந்த வழக்கில் இதுவரை ஒரு இம்மியளவும் முன்னேற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் கடந்த முறை கருணாநிதியை இரவு நேரத்தில் வீடு புகுந்து போலீசார் அடித்து, உதைத்து கைது செய்தபோதுமத்தியில் இருந்த பாஜக ஆட்சி வேடிக்கை பார்த்தது மாதிரி இம்முறை நடக்காது என்கின்றனர் திமுக வட்டாரத்தில்.
இப்போது இசட் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பில் இருக்கும் கருணாநிதியை கைது செய்வது என்றால் மத்திய உள்துறைஅமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இதனால் கைது படலத்தை இம்முறை போலீசாரால் அவ்வளவு எளிதாகஅரங்கேற்ற முடியாது என்றே தெரிகிறது.
இருப்பினும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் வழக்கு, விசாரணை என கருணாநிதியை இழுத்துவிட்டு வேடிக்கைபார்க்க அதிமுக மிகத் தீவிரமாக உள்ளது.
அதே நேரத்தில் மத்தியில் தங்கள் வசமுள்ள நிதித்துறை மூலம் போயஸ் தோட்டத்தின் மீதுள்ள பழைய வழக்குகளை தூசி தட்டவைத்து வருமான வரி, அமலாக்கப் பிரிவு ரெய்டுகளை விட திமுகவும் தயாராவதாகத் தெரிகிறது.
ஆதாரங்களுடன் கருணாநிதி அட்டாக்:
முன்னதாக அமராவதி பாலம் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளும் கடந்த அதிமுக ஆட்சியில் தான் எடுக்கப்பட்டன எனகருணாநிதி ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.
நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
கரூர் அமராவதி ஆற்றில் 1924ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தது. கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதிஅப்போதைய அதிமுக தொழில்துறை அமைச்சர் சின்னசாமி தலைமையில் நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் புதிய பாலம்கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கரூர் நகராட்சி கூட்டத்தில் பாலம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாததால் கரூர் நகராட்சிதனி அதிகாரியாக ஜனகராஜன் இருந்தார். அவர் நகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை, நகராட்சி நிர்வாக கமிஷனர்தேவராஜ், பாலம் கட்ட அனுமதி கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இதன் பின் பாலம் கட்டுவதற்கு 1996ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. பாலம் கட்டுவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்ய தமிழக அரசிடம் பல துறைகள் உள்ளன.
ஆனால் பாலம் கட்டுவதற்கு நகராட்சியிடம் பணம் இல்லாததால் ஹட்கோ உதவியுடன் பி.ஓ.டி. (பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர்)முறையில் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. பி.ஓ.டி. முறையில் கட்டுவது என அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சர்சின்னசாமி தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் தான் முடிவு எடுக்கப்பட்டது.
இந் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டது.நாங்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து பாலம் கட்டுவது தொடர்பான அரசாணையை கரூர் நகராட்சிக்கு அனுப்பி, புதியதீர்மானம் நிறைவேற்றி அனுப்பும்படி கோரினோம்.
இதன் பின் பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் 8 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் இ.சி.சி. நிறுவனம் குறைந்ததொகைக்கு கேட்டதால் அந்த நிறுவனத்துக்கு பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஆக, அமராவதி பாலம் கட்ட முடிவுகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான் எடுக்கப்பட்டன என்றார் கருணாநிதி.