இது தான் பல்டியோ பல்டி..:9,813 சாலை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை- ஜெ அறிவிப்பு
சென்னை:
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்களை, ஆட்சி முடியப் போகும் தருவாயில் இன்று திடீரென தமிழக அரசு மீண்டும் வேலையில் அமர்த்தியுள்ளது.
அவர்களுக்கு 3 மாத சம்பளம் கருணைத் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமக ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி சாலைப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள்.
வேலை இழந்த விரக்தியில் 80 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்தும், மாரடைப்பு உள்ளிட்டவற்றாலும் இறந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.
சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
அவர்களை பணியில் சேர்க்கவே முடியாது என்றும், இவர்கள் எல்லாம் காசு கொடுத்து திமுக ஆட்சியில் வேலையில் சேர்ந்தவர்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்து வந்தார்.
இந் நிலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் ஞானோதயம் காரணமாக, இந்த 9,813 பேருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
ஜெயலலிதா அறிக்கை:
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய திமுக ஆட்சியின் நிர்வாக சீர்குலைவினால் பெரும் நிதிச் சுமையை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தமிழக அரசின் திறமைமிக்க நிதி நிர்வாக மேலாண்மை காரணமாக, நிதி சீரழிவிலிருந்து தமிழகம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பல புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையில், 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிலையில் 1997ம் ஆண்டு பராமரிப்பு நிதியைக் கருத்தில் கொள்ளாமல் 9,813 சாலைப் பணியாளர் பணியிடங்களை திமுக அரசு புதிதாக தோற்றுவித்தது. இதனால் 1996-97ல் ரூ. 25.35 கோடியாக இருந்த நிர்வாகச் செலவு 2001-02ல் ரூ. 77.58 கோடியாக உயர்ந்தது.
மேலும், சாலைப் பராமரிப்புக்கு கூடுதல் தொகையை ஒதுக்காததால், செலவீனம் 89 சதவீதமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து நிதி நிலையை சீரமைக்க வேண்டியும், பொது நலனைக் கருத்தில் கொண்டும் பெருத்த மன வேதனையுடன் சாலைப் பணியாளர்களை நீக்க வேண்டிய முடிவை எடுக்க நேரிட்டது.
தற்போது நிதி நிலைமை சீரடைந்து ஆரோக்கியமாக உள்ளது. இதனால் 2006-07ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த ஆணையிட்டுள்ளேன்.
இவர்கள் பணியேற்கும் நாள் முதல் ஏற்கனவே பெற்று வந்த ஊதிய முறையில் ஊதியம் வழங்கப்படும். அவர்கள் பணியில் இல்லாத காலத்தைப் பொருட்படுத்தாமல், பணிமுறிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பணியில் இல்லாத காலமும், பணியில் இருந்த காலமாக கருதப்படும்.
சாலைப் பணியாளர்கள் அனைவருக்கும் 3 மாத ஊதியம் கருணைத் தொகையாகவும் வழங்கப்படும். இந்த உத்தரவின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.
சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ. 50 கோடி கூடுதல் செலவாகும். கருணைத் தொகை காரணமாக ரூ. 12 கோடி செலவு ஏற்படும்.
மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு சாலைப் பணியாளர்கள் உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் பணியாற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தேர்தல் வரும் நிலையில் தினமும் பல சலுகைகளை அறிவித்து வருகிறார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபைத் தேர்தல் புண்ணியத்தால் இருண்டு கிடந்த சாலைப் பணியாளர்கள் வாழ்க்கையில் தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications