திமுகவிடம் இன்று லிஸ்ட் தரும் கூட்டணி கட்சிகள்
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குத் தேவையான தொகுதிகள் குறித்த பட்டியலை இன்று திமுகவிடம் அளிக்கவுள்ளன.
கடந்த 8ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இதன்படி இன்று பாமக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அளிக்கின்றனர்.
இதையடுத்து இவற்றைப் பரிசீலித்து, வரும் 15ம் தேதியில் இருந்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக குழு பேச்சு நடத்தி தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்யும்.
அதன் பின்னர் ஆளுக்கு எத்தனை சீட் என்ற விவரத்தை, திருச்சியில் மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டின்போது கருணாநிதி அறிவிப்பார்.
எந்தக் கட்சிகள் எத்தனை சீட்களைக் கோருகின்றன என்ற விவரம் இன்று மாலைக்குள கசிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த கட்ட பரபரப்புக்கு தமிழக அரசியல் அரங்கம் தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications