பெரியாறு அணை உயரத்தை அதிகரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி- கேரளாவுக்கு மூக்குடைப்பு
டெல்லி:
தமிழக, கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், அணையின் பராமரிப்புப் பணிகள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக, கேரள எல்லையில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
இந்த அணையின் தற்போதைய உயரம் 136 அடியாகும். அணையின் உயரம் குறைவாக இருப்பதால் மழைக் காலங்களில் அதிக அளவில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் பெருமளவிலான உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அணையின் உயரத்தை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
(இத்தனைக்கும் கேரளாவுக்கு பெரும்பாலான உணவு தானியங்களும் காய்கறிகளும் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. அம் மாநிலத்தினர் தங்களது நிலத்தை ரப்பர், ஏலக்காய் போன்ற பணப் பயிரகளை விளைவிக்கவே பெரும்ாலும் பயன்படுத்துகின்றனர். அரிசி, காய்கறிக்கு நிலத்தை வேஸ்ட் செய்வது இல்லை.)
மேலும், அணையில் பராமரிப்புப் பணிகளைச் செய்யவும் தமிழக அரசை அனுமதிக்காமல் கேரள அரசு இடையூறு செய்து வந்தது. இதுதொடர்பாக இரு மாநில அரசுகளும் தங்களது மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்தன.
இந் நிலையில், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதி கோரி இந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவை விசாரணைக்கு அமைத்தது.
இந்தக் குழு அணையை நேரில் வந்து பார்வையிட்டது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் உயர் மட்டக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தினால் அணை வலுவிழந்து விடும்.
ஆனால், 142 அடியாக உயர்த்தலாம் என பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதிக்கப்படுகிறது.
புதிதாக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு அணையை நேரில் பார்வையிட்டு சில வழிகாட்டுதல்களை தெரிவிக்கும். அதன் பின்னர் அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும், அணையின் பராமரிப்புப் பணிகள் அனைத்தையும் தமிழக அரசிடம் கேரள அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும். பராமரிப்புப் பணிகளில் கேரள அரசு தலையிடக் கூடாது என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பினால் முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நனவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அண்டை மாநிலமான கர்நாடகம், தமிழகத்துடனான தண்ணீர்ப் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளை கண்டு கொள்வதே இல்லை, அப்படியே கிடப்பில் போட்டு விடுவது வழக்கம்.
அதே பாணியை கேரள அரசும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவது தாமதமாகக் கூடிய அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications