ஜெவுடன் கார்த்திக் சந்திப்பு: ஆனாலும் பலனில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவ அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸ், தமிழகத் தலைவர் கார்த்திக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக கார்த்திக் பொறுப்பேற்றவுடன், அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக, அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் பிஸ்வாஸ் சென்னை வந்திருந்தபோது அவரும், கார்த்திக்கும் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

இதனால் அதிமுக தரப்பு அதிருப்தி அடைந்தது. பாரம்பரியாகவே அதிமுகவை ஆதரித்து வரும் பார்வர்ட் பிளாக்கின் முக்குலத்தோர் சமூக நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுகவுடன் கூட்டணி வைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும் அதிமுகவின் அதிதீவிர ஆதரவாளரான சந்தானம் எம்எல்ஏ தனியாக அக் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்தார். அதிமுகவின் உதவியுடன் கார்த்திக்கை கட்சியில் தனிமைப்படுத்த ஆரம்பித்தார்.

இதனால் குழப்பமடைந்த கார்த்திக், அகில இந்தியத் தலைமையிடம் நிலைமயை எடுத்துக் கூறி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியததை விளக்கினார். இதை பிஸ்வாசும் ஏற்றார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் மட்டுமே பார்வர்ட் பிளாக் கட்சி கூட்டணி வைக்கும் என்று அறிவித்த கார்த்திக், ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் ஜெயலலிதா, கார்த்திக்கைக் கண்டுகொள்ளவில்லை. மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது நீக்கத்திற்கு தடை உத்தரவு பெற்றார்.

இதனால் சந்தானத்தின் கை ஓங்கத் தொடங்கியது. மேலும், சந்தானம் மூலம் வந்தால் மட்டுமே பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக முன்வரும் என்றும் அதிமுக தரப்பிலிருந்து பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தகவல் போனது.

இதனால் கார்த்திக் மேலும் குழம்பினார். சந்தானத்துடன் சமரசத்திற்கு முயற்சித்தார். மேலும் அதிமுக கூட்டணிக்காக மன்னார்குடி வகையறா மூலம் தீவிரமாக முயன்று வந்தார். அதற்கு இப்போது பலனும் கிடைத்துவிட்டது.

பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிஸ்வாஸ் நேற்று சென்னை வந்தார். அவருடன் மேற்கு வங்காளஅமைச்சர் நரேந்திர தத்தாவும் வந்திருந்தார்.

இந் நிலையில் ஜெயலலிதாவை சந்திக்க பிஸ்வாஸ், கார்த்திக்கு, தத்தாவுக்கு நேற்று திடீர் அப்பாயின்மெண்ட் தரப்பட்டது.

இதையடுத்து இருவரும் ஜெயலலிதாவை சந்திக்க சென்றனர். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்ற 3 பேரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக கார்த்திக் பேச முயன்றதாகவும், ஆனால் அதை ஜெயலலிதா அவாய்ட் செய்துவிட்டதாகவும் தெரிகிறறு.

சந்திப்பைத் தொடர்ந்து பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். கடந்த முறை தமிழகம் வந்தபோது மரியாதை நிமித்தமாக கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேசினேன். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

தற்போது மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்துப் பேசினேன். இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச வேண்டும் என்று கோரி மாநிலத் தலைவர் கார்த்திக் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

நெல்லை மாநாட்டின்போது கூட்டணி குறித்த எங்கள் கட்சியின் முடிவை அறிவிக்கவுள்ளோம். எங்களது கட்சி தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தாய்க் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற பலர் மீண்டும் பார்வர்ட் பிளாக்கில் இணைந்துள்ளனர்.

சந்தானத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து மத்திய குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இந் நிலையில், அதிமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், மேற்கு வங்க அமைச்சர் நரேந்திர தத்தா, கட்சியின் மாநிலத் தலைவர் கார்த்திக் ஆகியோர் சந்தித்து தேர்தல் தொடர்பாக பேசினார்கள்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் பேசினார்கள் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி விஷயத்தில் சந்தானத்துடன் மீண்டும் வந்து பேசினால் மட்டுமே கார்த்திக்குக்கு சில தொகுதிகளை பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அதிமுக தரும் என்று தெரிகிறது.

இல்லாவிட்டால் வழக்கம்போல் சந்தானத்துக்கு மட்டும் ஒரு சீட் தந்துவிட்டு அத்தோடு கார்த்திக்கை கைகழுவி விடவும் வாய்ப்புள்ளது.

இதனால் முன்பை விட ஜெயலலிதாவை சந்தித்தபின் கார்த்திக் அதிக குழப்பத்தில் உள்ளார். இன்று நடக்கும் மாநாட்டில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுக்கு அவர் ஏதாவது டைம் லிமிட் தந்து அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது.

அதே போல கார்த்திக் நடத்தும் மாநாட்டுக்கு முக்குலத்தோர் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதையும், கூடும் கூட்டத்தையும் பார்த்துவிட்டு அதிமுக தரப்பு ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+